பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


உன்னுடைய சுகதுக்கங்களாகக் கூறமாட்டாய். அதுபோலவே, உலகப் பொருள்கள் அனைத்திற்கும் ஆதாரமாய் அவற்றைப் பிரிவின்றிக் கூடிநிற்கும் நிலையிலும் அவற்றின் தன்மை தன்னைப் பற்றாதவாறு தூய செம்பொருளாய் அப்பாற்பட்டு நின்ற சிவனிடத்திலே நிலைபெற்றுள்ள ஆன்மாக்கள் ககத்தால் உள்ளங்கிளர்தலும் துன்பத்தால் தளர்ச்சி யுறுதலுமாகிய வாதனைகள் யாவும் சிவனைப் பற்றுதல் இல்லையெனத் தெளிந்துனர்வாயாக எ-று.

உயிர்கள் படும் வாதனைகள் இவ்வுயிர்களைத் தாக்குவனவேயன்றி அவ்வுயிர்கட்குச் சார்பாயுள்ள சிவனைச் சாரவல்லன அல்ல என்பது கருத்து. உதரம்-வயிறு.கீடம்-புழு. "உன் உதரத்தே கிடந்த கீடம் உறுவதெல்லாம் நீ உற்றனையோ (உற்றாயல்லை) எனவே அத் துன்பங்களை உன்னுடைய துன்பங்களாகக் கூறமாட்டாய். செவ்வகையே நின்ற சிவன்பால் மன்னுயிர்கள் அழிவதும் ஆவதும் அவ்வகையே காண்” என இயைத்துப் பொருள்கொள்க. தோற்றக் கேடுகளின்மையின் நித்தமாய், நோன்மையால் தன்னை யொன்றுங் கலத்தலின்மையின் தூய்தாய்த் தான் எல்லாவற்றையுங் கலந்து நிற்கின்ற முதற்பொருள், விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி அதனைச் “செம்பொருள்” என்ற பெயராற் குறித்தார் திருவள்ளுவர்.செம்பொருள் எனினும் சிவம் எனினும் பொருள் ஒன்றே யென்பது, “செம்பொருளாய சிவமெனலாமே” (திருமந்) எனவரும் திருமூலர் வாய்மொழியால் இனிது புலனாம். திருவள்ளுவ நாயனாரும் திருமூலரும் அருளிய செம்பொருள், சிவம் என்னும் திருப்பெயர்களாற் குறிக்கப் பெற்ற இறைவனது இயல்பினை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது, -

“செவ்வகையே நின்ற சிவன்” என்னும்

இத் திருக்களிற்றுப்படியார் தொடராகும்.


அஅ. அவனே யவனி முதலாயி னானும்
அவனே யறிவாய்நின் றானும் - அவனேகாண்
ஆணாகிப் பெண்ணாய் அலியாகி நின்றானுங்
காணாமை நின்றானுங் கண்டு.

இஃது, அனைத்தறிவாகும் அது எனப் பெற்ற சிவ பரம்பொருளின் இயல்பினை விரித்துரைக்கின்றது.

(இ-ள்) நிலமுதல் நாதமீறாகிய தத்துவங்கள் தொழிற்படும்படி உலகின் நிமித்த காரணனாகவுள்ளவனும் சிவனாகிய அம்முதல்வனே. உயிர்களின் அறிவினை விளக்கி உயிர்க்குயிராய்த் திகழ்பவனும்