பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

151


அறிவுறுத்தியவாறு. இறைவன் உயிர்க்குயிராய் நிற்கவும் உயிர்கட்கு அநாதியே பற்றியுள்ள ஆணவமாகிய குற்றமும் உண்டாதலால் பசுத்துவமாய் ஆன்மாவைப்பிணித்துள்ள மலம் படிப்படியாக ஆன்மாவை விட்டுக் கழலும் பக்குவத்தை யடைந்தபொழுது உயிரினுள் நின்ற இறைவனும் உயிரினகத்தே ஒளிவிட்டு விளங்குதலால் அநாதியேயுள்ள களிம்பு நீங்கிய நிலையிற் செம்பிற் கிடந்தமாற்று ஒளிவிட்டுப் பொன்னென்னும் பெயர் பெற்றாற்போன்று, இறைவன் தூய்மையுற்ற ஆன்மாவைத் திருவடியிலே கூட்டிக் கொள்ளுதல் வேண்டித் தன்னுடைய பேரருளால் இவனையிடமாகக் கொண்டு எழுந்தருளி நின்றதன்றிச் சிவபெருமானே ஆன்மா அல்லன்; ஆன்மாக்களும் இறைவன் திருவடியிலே கூடிப் பேரின்பத்தை நுகர்வதொழிந்து சிவன் செய்யும் ஐந்தொழில்களே நிகழ்த்தவல்லன அல்ல. சிவபெருமான் தன்பேரருளால் ஆன்மாவாகியும் சிவமாகியும் நிற்கவல்லர். ஆன்மா என்றுந் தன்உண்மை குன்றாமற் சார்ந்ததன் வண்ணமாய் அதுவதுவாய் நிற்குமியல்புடையது. ஆகவே இவ்வான்மா சிவனுக்கு அடிமையாதல் என்பது பாசத்தாற் பிணிக்கப்பட்டுள்ள கட்டு நிலையில் மட்டுமன்றிப் பாசங்கழன்ற வீட்டு நிலையிலும் மாறாதுள்ளதே யென்பார் என்றும் இவனே” என்றார்

இத்திருவுந்தியார் பாடற்பொருளை விளக்கும் நிலையிலமைந்தது, அடுத்துவரும் திருக்களிற்றுப்படியாராகும்.


92. அவனிவனாய் நின்ற தவனருளா லல்ல
தெவனவனாய் நிற்கின்ற தேழாய்-அவனிதனிற்
றோன்றுமரப் புல்லூரி தொல்லுலகி லம்மரமா
யீன்றிடுமோ சொல்லா யிது.

(இ-ள்) மாற்றமனங்கழிய நின்ற சிவனாகிய அம்முதல்வன் இவ்வான்மாவைப்போல உடம்போடு கூடி நின்றது மும்மலத்தாரிற் பக்குவ முடைய உயிர்களுக்கு அவர்தம் திருவருட் பதிவுக்கு ஈடாக மலமாயை கன்மங்களைப் போக்கிப் பேரின்பம் வழங்கியருளுதற் பொருட்டுத் திருமேனிகொண்டு எழுந்தருளி வந்ததன்றி, இவ்வான்மாக்களுள் எவன்தான் அம்முதல்வனகிய சிவனாய் நிற்கவல்லவன்? (தனக்குவமையில்லாதா னாகிய சிவனது பெருமையினையும் ஏனைய மன்னுயிர்களின் சிறுமையினையும் உள்ளவாறறியும்) அறிவில்லாதவனே, புவியின்கண்ணே தோன்றி வளர்ந்த மரத்திலே ஒட்டி முளைத்த புல்லூரியென்னும் புதலானது நெடுங்காலமாக நிலைபெற்று வரும் இவ்வுலகிலே அம்மரத்தோடு ஒன்றாகி அம்மரம்தரும் கனிகளை அளிக்கவல்லதோ? இவ்வினாவிற்கு மறுமொழி சொல்வாயாக எ-று.