பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


திருமுறைகளில் வழங்கும் 'சிவமாதல்’ என்ற தொடர்க்கு, எல்லாம்வல்ல சிவம் மன்னுயிர்கட்கு அருள்வழங்குதற் பொருட்டுத் தூய நிலைபெற்ற ஆன்மாவாகி ஒன்றித் தோன்றுதல் என்று பொருள் கொள்வதே சைவசித்தாந்த மரபாகும். இவ்வாறு கொள்ளாது மலமகன்று தூய நிலை பெற்ற ஆன்மாவே “நான் அவனானேன்” என்னுந் தனது பாவனையால் சிவமானது எனக்கொண்டால் வரும் குற்றம் யாது? என வினவிய மாணாக்கனை நோக்கி அவனது அறியாமைக்கு இரங்கி அவனுக்கு அறிவுறுத்தும் முறையில் அமைந்தது, “அவன் இவனாய் நின்றது அவனருளால் அல்லது எவன் அவனாய் நிற்கின்றது? ஏழாய்” என்ற தொடராகும். அவன் இவனாதற்கும் இவன் அவனாகாமைக்கும் எடுத்துக்காட்டும் முறையில் அமைந்தது, "அவனிதனில் தோன்று மரப் புல்லூரி தொல்லுலகில் அம்மரமாய் ஈன்றிடுமோ? இது சொல்லாய்" என்பதாகும் அவனி - பூமி. ஏழை - அறிவிலி. ஏழை என்னும் ஐகார வீற்றுப்பெயர் 'ஏழாய்' என விளியேற்றது. புல்லூரி என்பது, தானே நிலத்தில் விதையாய் ஊன்றி நின்று நீருண்டுவளரும் ஆற்றலின்றி மரங்களில் ஒட்டித்தோன்றி அம்மரம் தரும் சாரத்தையுண்டு வளரும் ஒருவகைத் தாவரமாகும். புல்லூரி மரத்திற் பொருந்தி மரத்தின் ஒருபகுதியாகவே ஒன்றாக வளர்ந்தாலும் அம்மரம் தரும் கனிமுதலிய பயன்களைத் தரும் தன்மை அதற்கு இல்லை. அது போன்றே ஆன்மா சிவனருளால் சிவத்தோடு ஒட்டிச் சிவமாந்தன்மை தன்கண் தோன்றப் பேரின்பத்தை நுகர்ந்தாலும் சிவ பரம்பொருளுக்குரிய ஐந்தொழில் புரிதல் முதலிய இறைமைத்தன்மை ஆன்மாவுக்கு இல்லையென்பது இவ்வெடுத்துக் காட்டினால் இனிது புலனாதல் காண்க.


93. முத்தி முதலுக்கே மோகக் கொடிபடர்ந்
தத்தி பழுத்ததென் றுந்தீபற
அப்பழ முண்ணாதே யுந்தீபற.


இஃது, ஆன்மா சிவபரம்பொருளோடு ஒன்றிப் பேரின்பம் நுகர்தற்குத் தடையாவது இதுவென வுணர்த்துகின்றது.

(இ-ள்) முத்திக்கனி விளைதற்குரிய ஆன்மாவென்னும் கொடியிலே அஞ்ஞானமென்னுங்கொடி பலவாறாகப் படர்ந்து மூடிக் கொண்டு அவாவென்னும் பழம் பழுத்தது. (பிறவிக்கு வித்தாகிய) அப்பழத்தினை உண்ணாது தவிர்வாயாக எ-று.

“முத்திமுதல்” என்பதற்கு “முத்தியைப் பெறுதற்கு முதன்மையான ஆன்மா” எனவும் “முத்தியடைதற்கு ஏதுவாகிய ஆன்மா வென்னுங்கொடி” எனவும் முன்னுள்ள உரையாசிரியர்கள் உரை வரைந்துள்ளார்கள். மோகக்கொடி-அஞ்ஞானமென்னும் கொடி