பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

155


94. அகளத்தி லாநந்தத் தாநந்தி யாயே
சகளத்திற் றையலுடன் றோன்றி-நிகளத்தைப்
போக்குவதுஞ் செய்தான்தன் பொன்னடியென் புன்றலைமேல்
ஆக்குவதுஞ் செய்தான் அவன்.

இஃது இறைவன் குருவாகி யெழுந்தருளிச் செய்யும் தீக்கை முறையினை விளக்குகின்றது.

(இ-ள்) குற்றமற்ற தூய நிலையில் இன்பத்துள் இன்பம் நல்கும் ஞானமேயுருவாகவும் திருமேனிகொண்டு எழுந்தருளுங்கால் அருளாகிய சத்தியுடன் தோன்றியும் அநாதியே என்னைப் பிணித்துள்ள மலமாயை கன்மங்களாகிய விலங்கினைத் தீக்கை முறையாற் போக்குவதுஞ் செய்து தன்னுடைய பொன்னார்திருவடிகளை என்னுடைய புல்லிய தலையின்மேல் நிலைபெறுமாறு ஆக்குவதனையுஞ் செய்தருளினான் குருவாய் எழுந்தருளிய அம்முதல்வன் எ~று.

அகளம்-குற்றமற்ற அருவநிலை. சகளம்-உருவநிலை, ஆநந்தத்து ஆநந்தி என்றது, இன்பமேயுருவாகத் தோன்றி மன்னுயிர்களுக்கு இன்பத்தை நல்குவோனாகிய இறைவனை. யாவராலுங் காண வொண்ணாத அருவநிலையினனாகிய இறைவன், உயிர்கள் உய்திபெறுதற் பொருட்டுத் திருமேனி கொள்ளுமிடத்து அருளே திருமேனியாகக் கொண்டு சத்தியுடன் தோன்றி அருள்புரிவன் என்பார், “சகளத்தில் தையலுடன் தோன்றி” என்றார். -

"நானுமென் சிந்தையும் நாயகனுக்கெவ்விடத்தோம்
தானுந் தன்தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்’
                                                 (திருக்கோத்தும்பி)

எனலரும் திருவாதவூரடிகள் வாய்மொழி சகளத்தில் தையலுடன் தோன்றி யருள்புரியுந் திறத்தை இனிது புலப்படுத்துதல் காணலாம். நிகளம்-விலங்கு: என்றது, ஆன்மாக்களை அநாதியே பிணித்துள்ள மும்மலங்களாகிய கட்டினை, அவன் என்றது குருமேனி கொண்டெழுந்தருளிய அம்முதல்வனை.

அகளமாயாரும் அறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற, (1)

எனவரும் திருவுந்தியாரை மீண்டும் நினைவுபடுத்திக் குருவே என்னும் உண்மையினைத் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனர் தம்முடைய