பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

161


அடியார்களின் உள்ளத்தே இறைவனது திருவடிஞானமாகிய அருளமுதம் இடைவிடாது ஊறிப்பெருகும் இயல்பினை ஞானாசிரியர்கள் தியான நெறியில் தாம் பெற்ற திருவருளதநுபவத்தில் வைத்து மாணாக்கர்களுக்கு உணர்த்தியருள்வர்.

இவ்வியல்பினை

மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்திடா வகை நல்கினான்
வேய தோளுமை பங்கன் எங்கள் திருப்பெருந்துறை மேவினான்
காயத் துள்ளமு தூறவூறநீ கண்டு கொள்ளென்று காட்டிய
சேய மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே.
                                                              (சென்னிப்பத்து-5)

எனவருந் திருப்பாடலில் குருவாக எழுந்தருளித் தம்மை ஆண்டு கொண்டருளிய இறைவன் செயலில் வைத்துப் புலப்படுத்தியருளினமை இங்கு நினக்கத்தக்கதாகும். மாயக்கள் உண்ணுதலாவது, பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாடோறும் (அவற்றையே) மெய்யாகக் கருதிக் கிடந்துழலுதல், மாயம்-பொய், நிலையிலாப் பொருள். வறட்டுப்பசு-பால்கறவாப் பசு, கன்றினையீன்று தன்கன்றுக்கும் பிறர்க்கும் பயன்படாத வறட்டுப்பசு. இத்தொடர் திருவருளின் திறம் உணர்ந்து தன் உயிரின் அநுபவத்துக்கும் ஏனைய மன்னுயிர்களின் நல்வாழ்வுக்கும் ஒருசிறிதும் பயன்படாத மருளுடைய மாந்தரைக் குறித்து நின்றது.

இவ்வாறு காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ணலாகிய சிவாநுபவத்தை வழங்குதற் பொருட்டுத் தானே ஞானசிரியனாக எழுந்தருளி மெய்யுணர்வளித்த பெருமானுக்கு என்றும் மீளாவடிமை செய்தலே நன்றியுடன் செய்தற்குரிய கைம்மாறாகும் என நெஞ்சம் நெக்குருகிப் போற்றுவதாக அமைந்தது, அடுத்து வரும் திருக்களிற்றுப்படியார் பாடலாகும்.

97. தூலத் தடுத்த பளிங்கின் துளக்கமெனத்
தூலத்தே கின்று துளங்காமல் - காலத்தால்
தாளைத்தந் தென்பிறவித் தாளை யறவிழிந்தார்க்
காளன்றி யென்மா றதற்கு.

இஃது உயிர்கள்பால் வைத்த அருளே காரணமாகக் குருவாக எழுந்தருளித் தம்மை உய்வித்தருளிய முதல்வனது பெருங்கருணைத் திறத்தை நன்றியுடன் போற்றுகின்றது.