பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


(இ-ள்) பருப்பொருள்களைச்சார்ந்துள்ள படிகக்கல் தன்னையடுத் துள்ள பொருள்களின் பல நிறங்களால் தன்னியல்பு மறைக்கப்பட்டுக் கலக்கமுற்றாற்போன்று, ஆன்மாவாகிய யான் உலகப்பொருள்களாகிய பாசங்களின் சார்பிலேயகப்பட்டுக் கலக்கமுறாதபடி திருவருளால் இருவினையொப்பு உண்டாகி ஆணவமலம் கழலுதற்குரிய பக்குவ காலத்திலே எழுந்தருளிவந்து தம்முடைய திருவடியை (என்.சிந்தையிலும் சென்னியிலும் பொருந்தும்படி) தந்தருளி எனது பிறவி வேரறும்படி அருட்கண்ணால் நோக்கி எளியேனை ஆட்கொண்டருளிய பெருமானுக்கு என்றும் மீளா அடிமையாகித் தொண்டு புரிவதன்றி அவ்வருளுதவிக்கு யான் செய்தற்குரிய கைம்மாறு யாதுளது? (ஒன்றும் இல்லை) எ-று.

தூலம்-பருப்பொருள்: இரண்டாமடியில் “தூலம்” என்றது, ஐம்புலநுகர்ச்சிக்குரியனவாகத் தோன்றும் உலகப் பொருள்களை. பளிங்கு-தனக்கென்று ஒரு நிறமில்லாத சார்ந்ததன் வண்ணமாம் படிகக்கல். அடுத்தல்-சாரப்பெறுதல், துளக்கம்-அசைவு, கலக்கம்; பொருள்களின் பலவகை நிறங்களும் ஒருங்கு பதிந்தமையினாலே தனக்குரிய நிறம் இதுவெனப் புலனாதலின்றிக் கலக்கமுடையதாய்த் தோன்றுதல், பளிங்கானது தன்னது எனப் பிரித்துணரத்தக்க தனி நிறம் பெறாது தான் சார்ந்த பொருள்களின் வண்ணமாந் தன்மையினையுடையதாதல் போன்று, ஆன்மாவும் தான் சார்ந்ததன் வண்ணமாந் தன்மையினதாதலின், ஐம்புல நுகர்ச்சிக்குரிய உலகப் பொருள்களைச் சார்ந்தபோது அவற்றின் தன்மை தன்கண் மீதூர்தலால் தன்னியல்பு இதுவென்றுணராது கலக்கமுறுந் தன்மையதான எனது ஆன்மா கலக்கமுறாதபடி மலங்கழலும் பக்குவகாலத்தை யுண்டாக்கித் தன்னுடைய திருவடியைத் தந்தருளி அருள் நோக்கினால் எனது பிறவிவேர் அறுத்தனன் என்பார், “துாலத்து அடுத்த பளிங்கின் துளக்கம் எனத் துாலத்தே நின்று துளங்காமல், காலத்தால், தாளைத் தந்து என்பிறவித்தாளை அறவிழித்தார்” என்றார். தாள்-திருவடி. பிறவித்தாள்-பிறவிவேர். அற-அற்றொழிய விழித்தல்-அருட்கண்ணால் நோக்குதல். ஆள்-அடிமை; மீளாவடிமை. அதற்கு மாறு என்? என இயையும். அதற்கு-அருள்நோக்கினால் பிறவிவேர் அறுத்த அத்தகைய பேருதவிக்கு, மாறு-கைம்மாறு: மாற்றுதவி.

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்
     டளவிலா ஆனந்த மருளிப்
பிறவிவே ரறுத்தென் குடிமுழுதாண்ட
     பிஞ்ஞகா பெரியவெம் பொருளே
                                                   (திருவாசகம்-பிடித்தபத்து)

எனவும்,