பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


சிவஞானம் பெற்ற திருத்தொண்டர்கள் ‘கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்’ எனச் சேக்கிழார் அருளிய மெய்ம்மொழிக்குரிய விளக்கமாகத் திகழ்வது இத்திருக்களிற்றுப் படியாராகும்.

“கண்டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாளுந் திங்களாய் மிக்குலக மேழினுக்குங் -
கண்ணாளா வீதென் கருத்து.”
                                                         (அற்புதத்திருவந்தாதி)

எனவரும் அம்மையார் அருள்மொழி, சிவஞானச் செய்தியுடையோர் தொண்டின் வேட்கைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்தல் காணலாம். உயிர்கள் பாசப்பிணிப்புற்ற கட்டுநிலையிலன்றி வீட்டு நிலையிலும் அடிமையேயென்னும் மெய்ம்மையினை விளக்கும் முறையிலமைந்தது "நாற்கணத்தார் நாயகற்கும் நாயகிக்கும் நான் எப்பொழுதும் அடிமையாயிருத்தலன்றி ( மற்றொன்றும் இலேன்' என்னுந் தொடராகும். “நாயகர்க்கும் நாயகிக்கும் நந்திக்கும்” என்பதும் பாடம்.


99. என்னை யுடையவன்வந் தென்னுடனா யென்னளவில்
என்னையுந்தன் ஆளாகக் கொள்ளுதலால் - என்னை
அறியப்பெற் றேனறிந்த அன்பருக்கே யாளாய்ச்
செறியப்பெற் றேன்குழுவிற் சென்று.

இறைவனுக்கு அடிமைப்பட்டோர் அடியார்க்குத் தொண்டு செய்தலாற் பெறும் பயனை இந்நூலாசிரியர் தமது அநுபவத்தில் வைத்துணர்த்தும் முறையில் அமைந்தது, இச்செய்யுளாகும்.

(இ-ள்) அநாதியே என்னை அடிமையாகவுடைய சிவபெருமான் ஞானகுருவாகத் திருமேனிகொண்டு எழுந்தருளிவந்து ‘உனக்குள் நாம் நீங்காமல் என்றும் எழுந்தருளியிருப்போம்' என்று உயிர்த்துணையாய் உடனிருந்து ஒன்றுக்கும் பற்றாத என்னையும் தன் அடியவனாகக் கொண்டருளினமையால் ஆன்மாவாகிய என்தன்மையினையும், உள்ளவாறு அறியப்பெற்றேன் (தம்மையும் தம்முயிர்த் தலைவனையும்) உள்ளவாறு அறியும் மெய்யுணர்வு கைவரப்பெற்ற சிவஞானச் செல்வர்களாகிய அன்பர்களுக்கே தொண்டுபட்டு ஏவற்பணி செய்து அம்மெய்த் தவத்தோர் கூட்டத்திற் சென்று அவர்களை யணுகியிருக்கும் நற்பேற்றினைப் பெற்றேன். இனி இதற்குமேல் யான் பெறுதற்குரிய பெரும்பேறு வேறு யாதுளது? எ-று.