பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

165



இறைவனது திருக்குறிப்பினாலன்றி ஆன்மா தன்னியல்பினையுணர்தல் இயலாது. இறைவன் கருணையினால் ஆன்மாவை ஆட்கொண்டருளிய பின்பே ஆன்மாவின் இயல்பு இனிது புலனாகும் என்பார், “என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான்’ என்பர் நம்பியாண்டார். இதை ‘ஆள்தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டு” என நம்பியாரூரர் அருளியவண்ணம் இறைவனுக்கு ஆட்பட்டதன் பயன் அடியார் குழுவிற் சார்ந்து அவர்கட்குத் தொண்டுபுரிதலே என்பார், “அறிந்த அன்பருக்கே ஆளாய்க் குழுவிற் சென்று செறியப் பெற்றேன்” என்றார். குழு - அடியார் திருக்கூட்டம். செறிதல்-தொண்டு செய்து நெருங்கிப் பழகுதல். இத்திருக்களிற்றுப்படியார்,

செம்மலர் நோன்றாள் சேர லொட்டா
அம்மலங் கழிஇ யன்பரொடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும் .
ஆலயந் தானும் அரனெனத் தொழுமே. (சூத்திரம் 12)

எனவரும் சிவஞான போதத்திற்கும் அதன் விளக்கமாக,

“செங்கமலத் தாளிணைகள் சேரலொட்டாத்
      திரிமலங்கள் அறுத்தீசன் நேசரொடுஞ் செறிந்திட்
டங்கவர்தந் திருவேடம் ஆலயங்களெல்லாம்
      அரனெனவே தொழுதிறைஞ்சி ஆடிப்பாடி
எங்குமியாம் ஒருவர்க்கும் எளியோமல்லோம்
      யாவர்க்கும் மேலானோம் என்றிறுமாப்பெய்தித்
திங்கள் முடியாரடியார் அடியோமென்று
      திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடையோரே”
                                                      (சித்தியார் . சுபக்.)

எனவரும் சிவஞான சித்தியார்க்கும் மூலமாய் அமைந்துள்ளமை காணலாம். “ஈசன் நேசரொடுஞ் செறிந்திட்டு என வரும்” சித்தியார் தொடர், “அறிந்த அன்பருக்கே ஆளாய்ச் செறியப் பெற்றேன் குழுவிற் சென்று”என்னும் இத்திருக்களிற்றுப்படியார் தொடரையும் பொருளையும் இவ்வாறே யெடுத்தாண்டுள்ளமை இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும்.

௪௪. சிந்தையி னுள்ளுமென் சென்னியி னுஞ்சேர
வந்தவர் வாழ்கவென் றுந்தீபற
மடவா ளுடனேயென் றுந்தீபற.

திருவுந்தியார் என்னும் இந்நூலினை அருளிச் செய்த திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் தமக்கு ஞானாசிரியனாக எழுத்தருளி மெய்