பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


உலகமெலாம் ஒடுங்கிய ஊழிக்காலத்தே, ‘பெண்ணுரு வொரு திறன் ஆகின்று, அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினுங் கரக்கும்’ (புறநானூறு-கடவுள்வாழ்த்து) என்றவாறு அம்மையின் வடிவினைத் தன்னுள் அடக்கி மறைத்துக்கொண்டு ஒருவனாக நின்ற சிவபெருமான், உலகத்தை மீளத் தோற்றுவிக்கும் படைப்புக் காலத்திலே உயிர்களின் வினைத் தொடர்பினை நுகர்வித்துக் கழித்தற் பொருட்டும் உயிர்களை அநாதியேபற்றியுள்ள ஆணவமலம் கழலும் பக்குவத்தை யடைதற்பொருட்டும் தன்னுள் அடக்கிய சத்தியினை மீண்டும் தன்னுருவில் வெளிப்படச் செய்து அம்மையப்பராகவிருந்து, ஒடுங்கிக்கிடந்த ஆன்மாக்களை உலகு உடல் கருவி நுகர்பொருள்களுடன் மீளவும் தோற்றுவித்தருள்வன் என்பார், ‘அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக’ என்றார். இத்தொடரால் சங்காரகாரணனாகிய முதல்வனே உலகிற்கு நிமித்தகாரணன் என்பது புலப்படுத்தியவாறு காணலாம். இங்ஙனம் பல்லுயிர்க்குந் தாயுந்தந்தையுமாகிய இறைவர், மூவகை உயிர்த் தொகுதிகளின் இயல்புக்குத் தக்கவாறு ஆணவமலம் ஒன்றேயுடைய விஞ்ஞானகலர்க்குத் தன்மைக்கண் உயிர்க்குயிராய் உள்நின்று மெய்யுணர் வளித்தும், ஆணவம் கன்மம் என்னும் இருமலமுடைய பிரளயாகலர்க்கு நாற்றோளும் முக்கண்ணும் கறைமிடறு முடையராய் முன்னிலையில் தோன்றி மெய்ப்பொருளை அறிவுறுத்தியும், ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலமுடைய சகலர்க்கு அவர்களைப் போன்ற திருமேனியுடனே படர்க்கையிடத்தே குருவாக எழுந்தருளித் தீக்கை செய்து மெய்யுணர்வு நல்கியும் பாசத்தொடர்பறுத்து ஆட்கொண்டு அருள்புரிந்தும் காத்தருள்வார்’ என்பார், ‘அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர்’ என்றார். இங்ஙனம் மன்னுயிர்கட்கு அருள்புரிதல் வேண்டி இவ்வுலகத்துத் திருமேனிகொண்டு எளிவந்தருளினாராயினும் நிலமுதல் நாத முடிவாகவுள்ள தத்துவங்களைக் கடந்து மாற்றம் மனங்கழிய அப்பாற்பட்டு விளங்கும் அவரது உண்மையியல்பு யாவராலும் உணரவியலாததென்பார், ‘அம்மையப்பர் எல்லாவுல குக்கும் அப்புறத்தார்’ என்றார். இங்ஙனம் இறைவர் அண்டங் கடந்து அப்புறத்தாராயினும் தம்மின் வேறல்லாத அருள் என்னும் சத்தியாலே எல்லாவுலகங்களும் தொழிற்பட்டு இயங்கும் வண்ணம் உலகுயிர்களிற் பிரிவறக்கூடியிருந்தும் அவற்றின் தன்மை தம்மைப் பற்றாதவாறு அவற்றில் தோய்வின்றி நிலைத்துள்ளார் என்பார், ‘இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர்’ என்றார். “தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் தாமேயாய தலைவனார்” (7-53-3) எனவும்,

"கரந்துங் கரவாத கற்பகனாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே”

எனவும் வரும் திருமுறைப்பனுவல்கள் இங்கு நினைக்கத் தகுந்தனவாகும்.