பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

 

க. அகளமா யாரும் அறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற.


இது சிவமே குருவாக எழுந்தருளிய திருவருளின் திறத்தை வியந்து போற்றுகின்றது.

(இ-ள்) தோற்றமில்காலமாகத் தூய்மைப்பொருளாய் எத்தகையோராலும் இன்னதன்மைத்தென அறியவொண்ணாததாய் உள்ள சிவமாகிய அம் முழுமுதற்பொருளே நம்பொருட்டுத் திருமேனி கொண்டு குருவாக எழுந்தருளியது என்று உந்தி பறப்பாயாக. அறிதற்கரிய அம்முதற்பொருள் தானே வலிய வந்து மெய்யுணர்வை வழங்கியருளியது என்று உந்திபறப்பாயாக. எ - று.

உந்தி பறத்தல் என்றது, இளமகளிர்கூடி விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று. மகளிர் இருவர் அல்லது மூவராய்க் குதித்து விளையாடும் இவ்விளையாட்டில் அறிவுவளர்ச்சிக்குரிய பொருள்களைக் குறித்துத் தம்முள் உரையாடி மகிழும் நிலையிற் பாடப்பெறும் பாடல் உந்தீபற எனமுடியும் தாழிசைப்பாடலாகும். இம்முறையில் திருவாதவூரடிகள் அருளிச் செய்தது திருவாசகத்தில் வரும் திருவுந்தியாராகும் என்பதும், இறைவன் தக்கனது வேள்வியைச் சிதைத்துத் தேவர்களை யெல்லாம் திசைதிசையே அஞ்சியோடும்படி செய்த ஞானவெற்றியைப் போற்றிப் பரவும் முறையில் அமைந்தது திருவுந்தியார் என்பதும், திருவாசகத்தில் அமைந்த அத்திருவுந்தியாரை யாப்பினும் பொருளினும் அடியொற்றியமைந்ததே மெய்கண்ட நூல்கள் பதினான்கினும் முன்வைத்தெண்ணப்பெறும் இத்திருவுந்தியார் என்பதும் இங்கு உளங்கொளத்தக்கன.

மகளிர் இருவர் மூவர் கூடியாடும் இவ்விளையாட்டில் வழங்கிப் பெறும் ‘உந்தீபற’ என்பது ஒருமைபன்மை மயக்கம். ‘பற’ என்பதனைப் பறக்க என்பதன் விகாரமாகக் கொள்ளுதலும் பொருந்தும். இனி, உந்தீபற என்பதனை உம் தீபற எனப்பிரித்து, "உமது தீமைகளெல்லாம் பறக்கக்கடவது" எனவும்,'உம்முடைய் தீமைகள் எல்லாம் பறந்துபோம்படிக்கு நிற்பீர்' எனவும் பொருள் உரைத்தலும் உண்டு. உந்து ஈபற எனப் பிரித்து, ஈபோல் உந்திபற எனவும் ஈயே உந்திபற எனவும் பொருள்கொள்வாருமுளர். ‘ஆடேல் ஓர் எம்பாவாய்’ எனப் பாவைப்பாட்டு முடிதல்போன்று உந்திபறத்தல் என்னும் இவ்விளையாட்டுப் பற்றிய பாடல்களும் ‘உந்தீபற’ என்னும் முடிவினைப்பெற்று வரும் எனவும், உந்தீபற என்னும் இத்தொடர் மூன்றடித்தாழிசை