பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


யாகிய இப்பாடலில் இரண்டாமடியிலும் மூன்றாமடியிலும் முடிக்குஞ் சொல்லாக வருமெனவும், அங்ஙனம் வருங்கால் வினையெச்சத்துடன் கூடிய நிலையில் அவ்வெச்சத்தை வினைமுற்றின் தன்மையதாகச் செய்யும் விகுதிபோற் பயன்பட்டுவருமெனவும் திருவாசகத்துள் வரும் திருவுந்தியாரையும் இத்திருவுந்தியாரையும் ஒப்பு நோக்கியுணருங்கால் இனிது புலனாம்.

அகளம்-அருவம்; என்றது உயிர்க்குயிராய் நின்று அறிவிக்கின்ற, பேரறிவினை. சகளம்-உருவம்; என்றது, குருவாகிவந்து அறிவிக்கின்ற திருமேனியை. யாரும் அறிவரிது அப்பொருள் என்றது, தன்னைக் கூடினவர்களாலும் கூடாதவர்களாலும் இன்னதன்மையதென்று அறியவொண்ணாத சிவபரம்பொருளை. தானாகத்தருதல் - பிறிது காரணமின்றித் தன் அருளே காரணமாக எளிவந்து வலியக் கொடுத்தல். ‘தானாக’ என்பதற்குச் ‘சிவமேயாக’ எனப்பொருளுரைத்தலும் உண்டு. தருதல் - ஞானத்தைத்தருதல்.

‘அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்
தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை
உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட் டுலகமெல்லாஞ்
சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணம் கொட்டாமோ’

எனவும்,

‘பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார்
ஆராலுங் காண்டற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் னுளம்புகுந்த
ஆரா வமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்’

எனவும் வரும் திருவாசகச் செழும்பாடல்களை அடியொற்றி யமைந்தது, இத்திருவுந்தியாராகும். இதன் பொருளை விரித்து விளக்கும் முறையில் அமைந்தன பின்வரும் திருக்களிற்றுப்படியார் பாடல்களாகும்.


4. அகளமய மாய்கின்ற அம்பலத்தெங் கூத்தன்
சகளமயம் போலுலகில் தங்கி-நிகளமாம்
ஆணவ மூல மலமகல ஆண்டான்காண்
மாணவக என்னுடனாய் வந்து.


இது குருவே சிவனென அறிவுறுத்துகின்றது:

(இ-ள்) பேரறிவுப் பொருளாய் நிலைபெற்றுத் திருவம்பலத்திலே அருட்கூத்து இயற்றியருளுகின்ற எம்முடைய கூத்தப்பெருமான்,