பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

11


தம்முடைய திருவருளாலே இவ்வுலகில் ஓருருவமுடையவன்போல் குருவாக எழுந்தருளி என்னுடனே கூடியிருந்து என்னை அநாதியே பற்றியுள்ள ஆணவமாகிய மூலமலம் என்னைவிட்டு அகலுமாறு அடிமையாகக் கொண்டருளினான் மாணவனே இவ்வியல்புடைய நிகழ்ச்சியை அறிவாயாக எ~று

அகளமயம் - களங்கமற்ற தூய்மையுடையதாகிய பேரறிவு: சகளமயம்-உலகியல் பாசத் தொடர்புடைய உருவம். இவ்வாறு உலகில் பாசத்தொடர்புடைய உருவமாய்த் தோன்றினும் பாசத் தொடர்பு அவனுக்கில்லை என்பார், ‘சகளமயம் போல் உலகில் தங்கி’ என்றார். மன்னுயிர்களைத் தோற்றமில் காலமாகச் செம்பிற்களிம்பு போல் பற்றியிருந்து ஆன்மாவின் அறிவிச்சை செயல்களை மறைத்து நிற்கும் அகவிருள் என்பார், ‘நிகளமாம் ஆணவ மூலமலம்' என்றார். நிகளம்-விலங்கு; உயிரைப் பிணித்துள்ள பிணிப்பு. மூலமலம் அகல ஆளுதலாவது, உயிரைப் பிணித்துள்ள ஆணவமலம் உயிரைவிட்டுக் கழலும் பக்குவத்தை அடையுமாறு மெய்யுணர்வு அளித்து ஆட்கொள்ளுதல். ‘அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி யருளிய பெருமையைச் சிறுமையென்று இகழாது’ 'குருவே சிவன்’ எனத் தெளிந்து உணரும் திறத்தினை வற்புறுத்துவது இச்செய்யுள்.


5. ஆகமங்க ளெங்கே யறுசமயந் தானெங்கே
யோகங்க ளெங்கே யுணர்வெங்கே-பாகத்
தருள்வடிவுந் தானுமா யாண்டிலனே லந்தப்
பெருவடிவை யாரறிவார் பேசு.


இஃது உயிர்க்குயிராய் அருவாய் நின்ற இறைவன் குருவாக உருவத் திருமேனிகொண்டு எழுந்தருளுதலின் இன்றியமையாமையை அறிவுறுத்துகின்றது.

(இ-ள்) உயிர்களின் மலங்கள் நீங்கும்பக்குவ நிலையிலே எல்லாம் வல்ல இறைவன் தன்னிற் பிரிவிலா அருளாகிய அம்மையும் தானுமாகத் திருமேனி கொண்டு வந்து நம்மனோரை ஆட்கொள்ளாது விடுவானானால், அப்பாலைக் கப்பாலாக உள்ள அப்பெரும் பொருளை யார்தான் அறிந்து கூடவல்லவர்கள்? அம்முதல்வன் குருவாகித் திருமேனி கொண்டு வாரானாயின் மெய்ந்நூற்பொருளே யுணர்த்தும் ஆகமங்கள் எங்ஙனம் தோன்றி வழங்கமுடியும்? அவ்வாகமங்களால் உணர்த்தப்படும் ஆறு சமயங்களுடைய நெறிமுறைதான் உலகில் எங்ஙனம் நிலைபெற்று வழங்கமுடியும்? அச்சமய நெறிகளிலே முதல்வனைத் தம் அகத்துள் வைத்து ஒன்றிப் பயிலும் யோகப்பயிற்சிதான் எங்கே உண்டாகும்? சுட்டியுணரும் உயிருணர்வும், இருந்