பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

13


சுகத்தை அநுபவிக்கப் பெறாது போக்குவாருடனே திரிகையால் தன்னுடைய நெஞ்சத்தைப் பார்த்து என் பெண்ணே தகாதவற்றிற்கு உட்படுகின்றாய் என, பேதைமையதனால் நெஞ்சத்தைப் பெண்ணெனக் கூறியது” என்பது தில்லைச்சிற்றம்பலவர் தரும் விளக்கமாகும். “இங்குப் பெண் என ஆன்மாவை அழைத்தது சிவனாகிய தலைவனோடு கூடி இன்பத்தை நுகர்தல் ஒப்புமைபற்றி” என்பர் பழைய உரையாசிரியர். இக் கருத்தே பொருத்தமுடையதாக அமைந்துள்ளது.

இத் திருவுந்தியாரின் விளக்கமாக அமைந்தன. பின்வரும் திருக்களிற்றுப்படியார் பாடல்களாகும்.


6. சாத்திரத்தை ஒதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்க்குநலம் வந்துறுமோ-ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய்இதனைச் செப்பு.


இது குருவின் உபதேமின்றிச் சாத்திரம் பயன்தராது என அறிவுறுத்துகின்றது. -

(இ-ள்) குருவின் உபதேசமின்றி மெய்ந் நூல்களைக் கற்றவர்களுக்கு ஞானாசிரியனது அருள் மொழியினாலே வாய்த்தற்குரிய எல்லா ஞானச் செல்வங்களும் வந்து அடையுமோ அடையமாட்டா; அஃது எதுபோலெனின்? அலைகளால் ஆரவாரிக்கின்ற கடலின் நீரைக் குடித்தவர்க்கு நீர்வேட்கையாகிய தாகம் தணியுமோ, தணியாதல்லவா? தெளிந்த அறிவின் நீர்மையுடைய மாணவனே இதில் ஐயம் உண்டாயின் சொல்வாயாக எ-று.


சாத்திரங்கள் கடல் போன்றன. அவற்றின் நுண்பொருள்களை மாணவர்கள் ஏற்றுக் கொள்ளும் திறத்தில் சுவைபட உபதேசிப்போன் குருவாவான். அத்தகைய குருவின் உபதேசமின்றி ஒருவர் தன் முனைப் பாலே சாத்திரப் பொருளை ஓதியுணர்வோம் என்று முற்படுதல் அவர்க்கு மயக்கமாகிய உவர்ப்பினை உண்டாக்குவதல்லது தெளிந்த ஞானமாகிய சுவையினை நல்குதலாகிய நுகர்ச்சியைத் தாராது என்பார், “ஆர்த்த கடல் தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந் திடுமோ” என்றார். தாகம் - தண்ணீர்விடாய், தெண்ணீர்மை-தெளிந்த அறிவின் தன்மை.


7. இன்று பசுவின் மலமன்றே யிவ்வுலகில்
நின்ற மலமனைத்தும் நீக்குவதிங் - கென்றால்
உருவுடையா னன்றே வுருவழியப் பாயும்
உருவருள வல்லான் உரை.