பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


இது, மாயையின் காரியமாகிய உடல்கருவிகரணங்களிற் கட்டுண்ட உருவுடையனாகிய குரு, ஆன்மாக்களைப் பற்றிய மலங்களைப் போற்றி மெய்யுணர்வளிக்கவல்லனோ? என ஐயுற்ற மாணாக்கர்க்கு ஐயந்தீர எடுத்துக்காட்டுத்தந்து விளக்குகின்றது.

(இ-ள்) இக்காலத்து இவ்வுலகில் வாழும் உயிர்களைப் பற்றிய மும்மலங்களையும் ஏனைப் புறஅழுக்குகளையும் போக்குவது பசுவின் சாணமல்லவா? (இவ்வாறு கோமயமாகிய மலமே ஏனைய மலங்களையகற்றித் தூய்மைநல்கும்) என்றால் (அதுபோன்று) இங்கு உருவாகிய உடம்பொடு கூடிய ஆன்மாக்களுக்கு உடல் கருவி கரணங்களாகிய கட்டுக்கள் அற்றொழியத் தூய்மையேயுருவாகிய சிவஞானத்தை வழங்கியருள வல்லவன் மக்களைப் போன்று திருமேனி கொண்டெழுந்தருளிய ஆசிரியன் அல்லவா? இதற்குத் தடையேது முண்டாயிற் சொல்வாயாக எ-று.

‘இன்று இவ்வுலகில் நின்ற மலம் அனைத்தும் நீக்குவது பசுவின் மலமன்றே என்றால் (அதுபோன்று) இங்கு உரு அழியப் பாயும் உரு அருளவல்லான் உருவுடையான் அன்றே? உரை’ என இயையும்: பசுவின் மலம் - ஆன்சாணம்; கோமயம் சாணமாய்ப் புறவழுக்கினை யகற்றித் தூய்மை செய்வதற்கும் பராவணமாகிய திருநீறாய் உயிர்களின் மும்மல அழுக்கினைக் களைதற்கும் பயன்படுவது போன்று, ஆசிரியன் மேற்கொண்ட பாசத்தன்மையதாகிய உருவும், மாணாக்கரது பாசவுருவினைக் களைந்து மெய்ஞ்ஞானமாகிய உருவினை வழங்க வல்ல தாகும் என எடுத்துக்காட்டுத் தந்து விளக்கியவாறு. இப்பாடலில் உள்ள உரு மூன்றனுள் முன்னையது ஆசிரியன் திருமேனி, இரண்டாவது மக்களது பாசத்தொடர்பு; மூன்ருவது மெய்ஞ்ஞானமாகிய பொருள்.

இனி, இப்பாடலின் இரண்டாமடியில் ‘நீக்கினது ஆங்கு’ எனப் பாடங்கொண்டும் மூன்றாமடியில் ‘உருவுடையான் அன்றே’ என்பதற்குச் ‘சிவன் நம்மைப் போலச் சரீரத்தையுடையவன் அல்லவே' எனவும் 'உருவழியப்பாயும் உருவருளவல்லான்' என்பதற்கு ‘நம்முடைய பிறவியழியும்படிக்குத் தோன்றுந்திருவருளாகிய திருமேனியெடுக்க வல்லனே’ எனவும் பொருள் வரைந்தும் “ஆசிரியர் திருமேனி இரு மாயையிலேயுண்டான சரீரமல்லவென்பது கண்டுகொள்க” என விளக்கம் தருவர் பழைய வுரையாசிரியர்.


௩. கண்டத்தைக் கொண்டு கருமமுடித்தவர்
பிண்டத்தில் வாராரென் றுந்தீபற
பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற.

இது, குருவின் திருவருளால் வினைத்தொடர்பு அறுத்தவர்களே பிறவா நிலை பெற்றவர்கள் என அறிவுறுத்துகின்றது.