பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


மெய்யடியார்களுக்கு எப்படி இனிய நுகர்ச்சிப் பொருளாய் விளங்கியதோ அப்படியே ஒப்பற்ற பேரின்பப் பொருளாயிருந்தது எ-று.

சிவாதுபவமாகிய பேரின்பநிலை அதனைப் பெற்று இன்புறுவோர்க்குப் புலணாவதல்லது பிறர்க்கு இன்னதன்மைத்தெனச் சொல்லால் வெளியிட்டுரைக்குந் தரத்தன்று என்பதாம். இவ்வாறிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்? என்பதும் பாடம்.


ரு. ஏகனு மாகி யநேகனு மானவன்
நாதனு மானானென் றுந்தீபற
நம்மையே யாண்டானென் றுந்தீபற.

இஃது இறைவனது இலக்கணமும் அம்முதல்வனே குருவாக எழுந்தருளி மன்னுயிர்களை ஆட்கொண்டருளும் முறைமையும் அறிவுறுத்துகின்றது.

(இ-ள்) தன்னியல்பால் தான் ஒருவனேயாகியும் உயிர்க் குயிராய்ப் பொருள் தோறும் கலந்து நிற்றலால் பலவாகியும் திகழும் இறைவன், நம்பொருட்டுத் தானே அறிந்தும் அறிவித்தும் உடனிருந்து உபகரிக்கும் நிலையில் குருவாகவும் எழுந்தருளி வந்தான் என்றுணர்வாயாக. எத்தனையும் அரிய பெரியோனகிய அம்முதல்வன் எத்தனையும் எளிய சிறியோமாகிய நம்மையும் தன் பெருங்கருணைத் திறத்தால் ஆண்டு கொண்டருளினான் என்று மகிழ்வாயாக. எ-று.

வேதத்துட் கூறப்படும் ஏகம் (ஒன்று) என்பதற்கு ‘இறைவன் ஒருவன்’ என்பதே பொருள் என அறிவுறுத்துவார் இறைவனை ஏகன் எனக் குறித்தார். ‘ஒன்றே குலனும் ஒருவனே தேவனும்’ (2104) என்பது திருமந்திரம். ‘ஒருவன் என்னும் ஒருவன்காண்க’(திருவண்டப்பகுதி)என்பது திருவாசகம். 'ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றே பதி’ (வெண்பா. 7) என்பது சிவஞானபோதம். இவ்வாறு இறைவனே ஏகன் (ஒருவன்) என மெய்ந்நூல்கள் குறிப்பதன் நோக்கம் அவனுக்கு ஒப்பாருமிக்காருமில்லை; ‘தனக்குவமையில்லாதான்' (திருக்குறள்-7) அம்முதல்வன் என்னும் உண்மையினை அறிவுறுத்தற் பொருட்டேயாம். இங்ஙனம் தன்னியல்பால் ஒருவனாகிய இறைவன் உயிர்க்குயிராய்ப் பொருள்தோறும் நீக்கமறக் கலந்துநின்று உலகுயிர்களை இயக்கியருளுதலால் உலகிற் பலவேறு வடிவினனாகவும் திகழ்கின்ருன் என்பார், ‘அநேகனுமானவன்’ என்ருர்.

“நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்
உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ?”

(திருத்தோணோக்கம்-5)