பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

19


என வரும் திருவாசகம் ஒருவனாகிய இறைவன் பலவேறு வடிவினனாக உலகுயிர்களோடு பிரிவறக் கலந்து விளங்குந் திறத்தை விரித்துரைப்பதாகும். முப்பத் தாறாந் தத்துவமாகிய நாத தத்துவத்தின் முடிவில் திகழ்வோன் இறைவன் என்பது உணர்த்துவார் நாதன்' என்றார். திருப்பெருந்துறையிற் குருந்தின்கீழ்க் குருவாய் எழுந்தருளித் தமக்கு மெய்யுணர்வுபதேசம் நல்கிய இறைவனே ‘நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க’ எனத் திருவாதவூரடிகள் போற்றியவண்ணம் திருவியலூர் உய்யவந்த தேவநாயனாரும் தமக்குக் குருவாய் எழுந்தருளிய இறைவனை ‘நாதனும் ஆனான்’ எனப்போற்றிய திறம் இங்கு ஒப்பு நோக்கியுணரத் தகுவதாகும், எத்தனையும் அரியனாகிய அம்முதல்வன் எத்தனையும் எளியராகிய நம்மையும் தனது பெருங்கருணைத் திறத்தால் ஆட்கொண்டருளினன் என்பார் நம்மையே ஆண்டான் என உளமுருகிப் போற்றினர். ‘நம்மையே’ என்புழி ஏகாரம், ‘நம்மையும்’ என இழிவு சிறப்பும்மையின் பொருள் தந்து நின்றது.

“அத்தாவுன் னடியேனை அன்பாலார்த்தாய்,
       அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்,
எத்தனையும் அரியை நீ எளியையானாய்,
       எனையாண்டு கொண்டிரங்கி யேன்றுகொண்டாய்' (6-95-8)

எனவரும் திருத் தாண்டகச் செழுமறை இங்கு உளங்கொளற் பாலதாகும். ஆகி, ஆனவன், ஆனான் என இத்திருவுந்தியாரிற் பயின்ற ஆக்கச்சொற்கள் செயற்கைப் பொருளுணர்த்தாது இயல்பாய செம்பொருளின் வேறு வேறு திறங்களைச் சுட்டி நின்றன. ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க எனவரும் சிவபுராணத் தொடரை அடியொற்றி யமைந்தது இத் திருவுந்தியாராகும்.


10. ஒன்றுங் குறியே குறியாத லாலதனுக்
கொன்றுங் குறியொன் றிலாமையினால்—ஒன்றோ
டுவமிக்க லாவதுவுங் தானில்லை யோவாத்
தவமிக்கா ரேயிதற்குச் சான்று.

இது ஏகனுமாகி யநேகனுமாகிய இறைவனது இயல்புணர்த்துகின்றது.

(இ-ள்) செம்பொருளாகிய சிவபரம்பொருளுக்கு உலகுயிர்களிற் பிரிவறக் கலந்துபொருந்தும் திருவருளாகிய சத்தியே திருமேனியாகிய அடையாளமாதலானும் அவ்வருட்சத்தியின் துணையின்றி அப்பரம்பொருளைப் பொருந்தியுணர்தற்குரிய அடையாளம் பிறிதொன்றில் லாமையிலுைம் அம் முதல்வனுக்கு உலகில் உவமை காட்டிச் சொல்லுதற்குரிய பொருள் பிறிதொன்றுமில்லை. இங்ஙனம் யாவராலும் உணர்தற்கரிய முழுமுதற் பொருளொன்று உண்டெனவுணர்தற்குச் சான்றாவார் அம் முதற்பொருளொடு இடைவிடாது ஒன்றியுணரும் தவப்பெருஞ் செல்வர்களே எ-று.