பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


தம்மை அன்புடன் எதிர்கொண்ட அவர்தம் பேரன்பினை நினைந்து நெஞ்சம் நெக்குருகி, இவர்களுடைய மைந்தனை முதலைவாயினின்றும் அழைத்துக் கொடுத்த பின்னரே அவிநாசியில் எழுந்தருளிய பெருமானை இறைஞ்சுதல் வேண்டும் என்னுந் துணிவினராய், அவர்களோடு அங்குள்ள குளத்தின் கரையையடைந்து அவிநாசி யிறைவனை நினைந்து ‘எற்றான் மறக்கேன்’ என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகத்தினைப் பாடத் தொடங்கி, “உரைப்பாருரையுகந் துள்க வல்லார் தங்கள் உச்சியாய்” எனவரும் நான்காம் பாடலில் ‘கரைக்கால் முதலயைப் பிள்ளே தரச் சொல்லு காலனையே’ எனப்பாடியபோது, காலனாகிய இயமன் மடுவிலிருந்த முதலை வயிற்றிலே முன்னர் விழுங்கப்பட்டு இறந்த சிறுவனது உடம்பை அவன் இறந்த காலம் முதல் இத்திருப்பதிகம் பாடும் காலம் வரை அடைதற்குரிய வளர்ச்சியுடையதாகச் செய்து அவ்வுடம்பினுள்ளே அப்புதல்வன் உயிரைக் கொண்டு புகுத்தினான் என்பதும் உடனே முதலையானது மடுவினின்றும் வெளிப்பட்டு வந்து முன் தான் விழுங்கிய அப்புதல்வனைக் கரையிற் கொண்டு வந்து உமிழ்ந்தது என்பதும் வரலாறு. முதலை தான் விழுங்கிய பிள்ளையைக் கரையின் கண்ணே கொண்டு வந்து உமிழும்படி அன்றொரு நாள் காலனை ஏவிப்பணிகொண்டு பாலனது மரணத்தினை நீக்கி மறைச்சிறுவனை மீட்டுத் தந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனாரது அற்புதச் செயலே இத் திருப்பாடலில் ‘கராங்கொண்ட பாலன் மரணம் அன்று காலனை ஏவித் தவிர்த்ததுவும்’ என விரித்துரைக்கப் பெற்றது.

இவ்வாறு நாதன் தன் செயலே விளங்கப் பெறும் நிலை எல்லார்க்குங் கிட்டுமோ என வினவிய மாணவனை நோக்கி அறிவுறுத்துவதாக அமைந்தது, அடுத்து வரும் வெண்பாவாகும்.


13. தூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின்
தாங்களே சட்ட வுறங்குவர்கள் - ஆங்கதுபோல்
ஐயன் அருட்கடைக்கண் ஆண்டதற்பின் அப்பொருளாய்ப்
பைய விளையுமெனப் பார்.

இஃது, ஆன்மாவின்கண் தற்செயல்கெடச் சிவன் செயலே விளங்கப் பெறும் இந்நிலை குருவின் அருளாற் கைகூடும் என்கின்றது.

(இ-ள்) உறக்கம் வந்தவர்களையெடுத்து மெல்லிய படுக்கையிலே கிடத்தியபின் அவர்கள் தாமே நன்றாகத் துயில்வார்கள். அதுபோலச் சரியைகிரியையோகங்களாகிய பணிகளைச் செய்து முற்றிய ஆன்மாக்கள் ஞானாசிரியனது திருவருள் நோக்கம் அடிமை கொண்ட