பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


உள்ளமுதல் என்றது, உயிர்கள் உடல் கருவி உலகு நுகர்பொருள்களைப் பெற்று வாழ்தற்கு அடிப்படையாகவுள்ள நிலமுதல் நாதமீறாகிய தத்துவங்களே. முதல்-தத்துவம், ‘முதல் முப்பத்தாறே’ எனவரும் திருமந்திரத்தில் இச்சொல் இப்பொருளிற் பயின்றுள்ளமை காண்க. மாயையென்னும் சடப்பொருளின் காரியமாகிய இத்தத்துவங்கள் தோன்றியழியுந் தன்மையவாயினும் இவையனைத்தும் ஒடுங்கிய மாயையென்னும் காரணநிலையில் என்றும் உள்பொருள்களாகவே கொள்ளத்தக்கன என்பது புலப்பட ‘உள்ள முதல்’ என்ருர், ஒன்றாய் ஒருவுதல் - ஒருங்கே நீ ங் கு த ல், ‘ஒன்றறாய் ஒருவ’ என்பது பாடம். வரின் - (திருவருள்ஞானம்) வருமானால்; வரின் என்னும் வினையெச்சம் ஞானம் வருதல் இன்றியமையாதது என்னும் குறிப்புணரநின்றது. இத்தகைய திருவருள் ஞானம் உயிரின்கண் தோன்றினாலல்லது யான் எனது என்னும் செருக்கு அற உள்ளம் உருகாதென்பதும் உள்ளம் உருகவே இறைவன் அத்தகைய தூய உள்ளத்திற்பொருந்தி அவ்வான்மாவே சிவமெனத்தோன்றும் வண்ணம் உடனாய்நிற்பன் என்பதும்,

‘யான்செய்தேன் பிறர் செய்தார் என்னதியான் என்னும்
    இக்கோணை ஞானவெரியால் வெதுப்பி நிமிர்த்துத்
தான்செவ்வே நின்றிடஅத் தத்து வன்தான் நேரே
    தனையளித்து முன்னிற்கும் வினையொளித்திட் டோடும்
நான்செய் தேன் எனுமவர்க்குத் தான் அங்கின்றி
    நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம்
ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பின் அல்லால்
    ஒருவருக்கும் யானெனதிங் கொழியா தன்றே.’

(சித்தியார் - சுபக் - 305)

எனவரும் திருவிருத்தத்தால் இனிது விளங்கும்.

‘புணரவரநில்லா பொருள்’ என ஈற்றடியிலுள்ள ‘பொருள்’ என்னும் எழுவாய் (பொருள்) வந்து உன்னுடன் ஆம் என முன்னரும் சென்றியைந்தது. இங்குப் ‘பொருள்’ என்றது, மெய்ப்பொருளாகிய சிவத்தை; தெள்ளியுணருமவர் என்றது, தம்முடைய குறையறி வினாலே இறைவனை ஆராய்ந்தறிய முற்படுவோர். தாங்கள் உளராதல் என்றது, எப்பொருளையும் ஆராய்ந்தறிதற்கேற்ற அறிவுடையார் தாமே என்னும் தன்முனைப்புடையராயிருத்தல். அன்னோர் தம் குறையுணர்வினைத் துணையாகக்கொண்டு சிந்தனைக்கரிய சிவபரம் பொருளை ஆராய்ந்து கூடுதற்கு முற்பட்டாராக அவர்முன் அப்பொருள் நில்லாது மறையும் என்பார் ‘புணரவரப் பொருள் நில்லா(து)’ என்றார். ‘நில்லாது’ எனற்பாலது துவ்விகுதி கெட்டு