பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


என்னும் தன்முனைப்புக்கெட இம்முத்திறங்களுள் அவரவர் பயின்று வல்ல நெறியால் யாரேனும் இறைவன்பால் அன்பு செய்வாராயின் யாராலும் காணமுடியாத சிவபெருமான் அவர் பால் வெளிப்பட்டுத் தோன்றுவன் எ - று.

சிவதன்மம், சிவயோகம், சிவஞானம் என்னும் மூவகை நெறிகளையும் மேற்கொண்டொழுகுதலால் வரும்பயன் நான் என்னும் தற்போதம் அழிதலே யென்பார், சிவதன்மத்தால், சிவயோகத்தால், சிவஞானத்தால் நான் அழிய என்றார். இம்மூன்றனுள் தமக்கு வல்லதொன்றனை மேற்கொண்டு உலகத்தார் யாரும் இறைவனிடத்து அன்பினைப் பெருக்கிக் கொள்ளலாம் என்பார், ‘வல்லதனால் ஆரேனும் அன்புசெய்யின்’ என்றார். ஆரேனும் என்புழி உம்மை இழிவு சிறப்பு: ‘ஆரேனும் காணா அரன்’ என்புழி உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது. சரியை கிரியை இரண்டினையும் இத்திருக்களிற்றுப்படியார் 'சிவதன்மம்' என ஒன்றாக அடக்கிக் கூறுகின்றது. சிவதன்மம் என்னும் இச்சொல்,

'திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான்' (2-43–6)

எனவரும் ஆளுடையபிள்ளையார் தேவாரத்திற் பயின்றுள்ளமை காணலாம்.


16. மெல்வினையே யென்ன வியனுலகி லாற்றரிய
வல்வினையே யென்ன வருமிரண்டும் - சொல்லிற்
சிவதன்ம மாமவற்றிற் சென்றதிலே சேர்வாய்
பவகன்மம் நீங்கும் படி.

இது முற்கூறிய சிவதன்மத்தை மெல்வினை வல்வினை என இருவகைப்படுத்துரைக்கின்றது.

(இ) - ள்) (உலகத்தாராற் செய்தற்குரிய) மெல்வினை யெனவும் இப்பரந்த உலகில் ஒருவராலும் செய்தற்கரிய வல்வினையெனவும் கூறப்பட்டுவரும் இவ்விரண்டும் சொல்லுமிடத்துச் சிவதன்மம் ஆதலால் மாணவனே அவ்விரண்டனுள் உனக்கு மனம் பற்றியதொன்றிலே சென்று உனது பிறப்புக்குக் காரணமாகிய வினைத்தொடர்பு நீங்குமாறு அச்சிவபரம் பொருளில் அன்பினாற் சேர்வாயாக. எ-று.

அவற்றிற் சென்று பவகன்மம் நீங்கும்படி அதிலே சேர்வாய் என இயைத்துப்பொருள் கொள்க. பவம் - பிறப்பு. கன்மம் - வினை.