பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


18. வரங்கடருஞ் செய்ய வயிரவர்க்குத் தங்கள்
கரங்களினா லன்றுகறி யாக்க - இரங்காதே
கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை
வல்வினையே யென்றதுநா மற்று.

இது சிவதன்ம வகையுள் ஒன்றான வல்வினையாமாறிது வெனவுணர்த்துகின்றது.

(இ-ள்) மேலான நற்பேற்றினை வழங்கும் சிவந்த திருமேனியையுடைய பயிரவ வேடத்தராகிய சிவனடியார்க்கு அக்காலத்திற் கறியமுது சமைத்தற் பொருட்டு (ச் சிறுத்தொண்ட நாயனாரும் அவர்தம் வாழ்க்கைத்துணைவியார் வெண்காட்டு நங்கையாரும் தம்முடைய அஞ்சுவயது பிள்ளை சீராளனை) த் தம்முடைய கைகளினாலே கொல்லுதலாகிய தொழிலைச் செய்தல் போன்ற கொடுமைவாய்ந்த செயல்களேயே நாம் முன்னர் வல்வினையென வகைப்படுத்துரைத்தது எ-று.

பயிரவ வேடமுடைய அடியார் வடிவில் எழுந்தருளியவன் எல்லாவுயிர்கட்கும் நல்ல பேற்றினை வழங்கும் செம்மேனி யம்மானாகிய சிவபெருமானே என்பது புலப்பட ‘வரங்கள் தரும் செய்ய வயிரவர்’ என்றார். “ஒருகுடிக்கு நல்ல சிறுவன் ஒருமகனைத் தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனமுவந்தே ஏதமின்றி அட்டகறி யாம் இட்டுண்பது” எனப்பயிரவ வேடங்கொண்ட அடியார் பணித்த வண்ணம் சிறிதும் வருத்தமின்றி அடியார் உண்ணப்பெற்றோம் என்னும் பெருமகிழ்ச்சியுடன் (தம்பிள்ளை சீராளனைத்) தம்கைகளாலே கொன்று தூய கறியமுதாக அக்காலத்திற் சமைத்தனர் என்பார் ‘அன்று கறியாக்க, இரங்காதே தங்கள் கரங்களினாற் கொல்வினையே செய்த’ என்றார். அன்று-அக்காலத்தில் சிவனடியார்பாற்கொண்ட பேரன்பினாற் செய்த இச்செயற்கருஞ் செயல் உலகநடைக்குப் பொருந்தவாழும் மக்கட்குலத்தாரால் நினைப்பினும் நெஞ்சுசுடும் கொடுமையுடையது என்பார் ‘கொடுவினேயே’ என்றார். தற்போத மிழந்த நிலையில் இறைவனிடத்தும் அவனடியார்களிடத்தும் கொண்டுள்ள உறுதியும் பேரன்பும் காரணமாக நிகழும் இத்தகைய கொடுமையுடைய அருஞ்செயல்களேயே நாம் முன்னர் வகுத்துரைத்த சிவதன்மவகையுள் ஒன்றாக ‘வல்வினை’ என்ற பெயராற் குறிப்பிட்டோம் என்பார், ‘கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை நாம் வல்வினையே என்றது’ என்றார். மற்று - அசை; இங்கு இரங்காமையாவது தம் புதல்வனையிழத்தல் பற்றிச் சிறிதும் மனம் வருந்தாமை.