பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

37


சிதறிய படிக்கட்டளைப் பொருள்களை) இறைவராகிய அவர்க்கே திருவமுதாம் படி உண்பித்து (த் தமது பிறவிவேரை) அறுத்தலாகிய வல்வினையைச் செய்த அரிவாட்டாய நாயனாரை இவ்வியல்பினரென நிலைநிறுத்தி நாம் புகழுமாறு எங்ஙனம்? (அவர்தம் புகழ்த்திறம் நமது உரையின் எல்லைக்குள் அடங்காது) எ-று.

செய்-வயல், உகுத்தல்-வீழ்ந்து சிதறுதல். திருப்படி மாற்று - திருக்கோயிலின் நாள் வழிபாட்டில் திருவமுதுக்குரிய படிக்கட்டளைப் பொருள்களாகிய செந்நெலரிசி முதலியன. ஐய-இறைவனே. இது அமுது செய்க-வீழ்ந்து சிதறிய இதனைத் திருவமுது செய்தருள்வாயாக; பைய இருத்தல்-தளர்ந்து வீழ்ந்த மயக்கம் நீங்க மெல்ல அமர்தல்; ஊட்டி-மிடற்றுத் தண்டு. ஊட்டி - உண்பித்து. நாட்டுதல்-நிலை நிறுத்தல். சோழ நாட்டிற் கணமங்கலம் என்ற ஊரிலே வேளாண்குடியிலே தோன்றிய தாயனார் சிவபெருமானுக்குச் செந்நெலரிசியும் செங்கீரையும் மாவடுவும் ஆகியவற்றை நாடோறும் தருவதனைத் தமது நியமமாகக் கொண்டு வாழ்ந்தார்.செல்வம் நீங்கிய வறுமை நிலையினும் கூலிக்கு வேலை செய்து இத்திருப்பணியினைத் தடையின்றிச் செய்துவரும் தாயனார் ஒரு நாள் செந்நெலரிசியும் செங்கீரையும் மாவடுவுமாகிய திருவமுதினை ஒரு கூடையில் எடுத்துக் கொண்டு முன் செல்ல இறைவரது திருமஞ்சனத்துக்குரிய பால் முதலியவற்றை அவர்தம் மனைவியார் எடுத்துக் கொண்டு பின் சென்றார். செல்லும் வழியில் தாயனார் பசியினாற் களைப்புற்று வயல் வெடிப்பில் இடறிவிழுந்தார். அவர் கொண்டு சென்ற உணவுப் பொருள்களும் வயல் வெடிப்பினுள் உக்கன. இறைவன் இவற்றைத் திருவமுது செய்தருளும் பேறு பெற்றிலேனே என வருத்தமுற்ற தாயனார் தம் கையிலுள்ள நெல்லறுக்கும் கதிர்வாளால் தமது கழுத்தையரியத் தொடங்கினர். அந்நிலையிற் சிவபெருமானது திருக்கை வயல் வெடிப்பினின்றும் வெளிப்பட்டுத் தாயனார் கையைப் பற்றிப் பிடிக்க மாவடுவுடன் கூடிய திருவமுதினை இறைவன் அமுது செய்தமைக்குரிய அடையாளமாக விடேல் விடேல் என்னும் ஓசை வயல் வெடிப்பினின்றும் தோன்றியது. அந்நிலையிற் சிவபெருமான் உமையம்மையுடன் விடை மீதுவிசும்பில் தோன்றித் தாயனார்க்கும் அவர் தம் மனைவியார்க்கும் திருவருள் புரிந்தார் என்பது வரலாறு.

‘ஆட்கொள்ளும் ஐயர்தாமிங் கமுது செய்திலர்கொல்’ என்னப்
பூட்டிய அரிவாள் பற்றிப் புரையற விரவும் அன்பு
காட்டிய நெறியின் உள்ளந் தண்டறக் கழுத்தி னோடே
ஊட்டியும் அரியா நின்றார் உறுபிறப் பரிவார் ஒத்தார்’

(பெரிய-அரிவாட்-17)

எனவரும் பெரியபுராணப் பாடல் இங்கு ஒப்பு நோக்கத்தகுவதாகும்.