பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


(இ-ள்) மனம் புறத்தே பலவற்றிலும் பரந்து விரியாமல் அகத்தே மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆதாரங்களில் ஆறிலும் இறைவனுக்குரிய அந்தந்தத் திருவுருவங்களை முறையே தியானித்துப் பழகிய பயிற்சியினாலே அவ் ஆறு ஆதாரங்களுக்கும் மேலாய் நிராதாரமாகிய மனவசைவற்றவிடத்தே நீ சென்று மேலிடமாகிய திருவருளிடத்தே செல்வாயாக. தூயோனாகிய இறைவனைக் கூடுதற்குரிய இம் மேலிடமாகிய அத்திருவருளேயாம். எ-று.

இத்திருவுந்தியார்,

ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று
மீதான தற்பரை மேவும் பரனோடு
மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தமீ தானந்த யோகமே. (709)

எனவருந் திருமந்திரத்தை அடியொற்றியமைந்ததாகும்.

“ஆறு ஆதாரங்களிலும் வைத்து முறையே வழிபடுதற்குரிய அதிதெய்வங்களாகிய மூர்த்திகளின் திருவருளுடனே மேற்சென்று புருவ நடுவாகிய ஆஞ்ஞைத் தானத்திற்கு அப்பால் மேலான பிரமரந்திரமாகிய வெளியில் (ஆயிரவிதழ்த்தாமரையில்) தற்பரை யாகிய சத்தியுடன் கூடிய சிவபரம்பொருளோடு அறிவுத்தான மாகிய மேதை முதலிய பதினாறு கலைகளையுடைய மதிமண்டலத்தை யடைய மேற்பட்டுத் தோன்றும் பேரொளிக் காட்சியில் ஒதுதற்கும் சிந்தித்தற்கும் அரிய நிலையில் ஒன்றி இன்புறுதலே சிவானந்தயோக மாம்” என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும்.

ஆறு ஆதாரங்களாவன: மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்பன. இவ்விடங்களில் வைத்து வழிபடுதற்குரிய அதிதெய்வங்கள் முறையே விநாயகன், பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் என்போராவர். மீதானம்-(ஆறு ஆதாரங்களுக்கும்) மேலாகவுள்ள இடம்; என்றது, புருவநடுவாகிய ஆஞ்ஞைத் தானத்திற்கு மேலாகவுள்ள பிரமரந்திர வெளியை. மேதை என்பது ஞானத் தீயாகிய கலை. இது தீப்பிழம்பின் நிறமுடையது என்பர். ஈரெண்கலை - பதினாறு கலை நிலைகள். பிரமரந்திரத்திற்கு அப்பாலுள்ள பரைவெளியிலுள்ள பதினாறு கலை நிலைகளாவன: 1. அகாரம், 2. உகாரம், 3. மகாரம், 4. விந்து, 5. அரைமதி, 6. திரோதினி, 7. நாதம், 8. நாதாந்தம், 9. இடப் புறத்துச் சத்தி, 10. வியாபினி, 11. வியோமரூபை, 12. அனந்தை, 13. அநாதை, 14. அநாசிருதை, 15. சமனை, 16. உன்மனை இவை பதினாறும் பராசத்தியின் நிலைகள் எனவும், இவற்றுள் அகரம் முதல்