பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

41



நாதாந்தம் வரையுள்ள எட்டும் ஆதாரம் எனவும், சத்திமுதல் உன் மனைவரையுள்ள எட்டும் நிராதாரம் எனவும் கூறுவர். மனம் புறப் பொருள்களிற் செல்லாமல் உடம்பின் அகத்தேயுள்ள ஆறு ஆதாரங் களிலும் முறையே அவற்றிற்கு அதிதெய்வமாகிய மூர்த்தியைத் தியானித்த பயிற்சியாலே நிராதாரமாகிய மனத்துளக்கமற்ற மேலிடத்திலே பரம்பொருளை வழிபட்டு மகிழுமாறுணர்த்தும் இத் திருமந்திரப் பொருளை,

“வானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும்
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் தாமே” (6-12-1)

எனத் திருநாவுக்கரசர் குறித்தருளியமை கூர்ந்துணரத் தகுவதாகும். ஆதாரங்கள் ஆறின் அமைப்பினை விளக்குவது,

நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலங்கண் டாங்கே முடிந்து முதலிரண்டுங்
காலங்கண் டானடி காணலு மாமே. (திருமந்-1704)

எனவருந் திருமந்திரமாகும்.

“நாலிதழ்த்தாமரை வடிவாகிய மூலாதாரமும், ஆறிதழ்த் தாமரை வடிவாகிய சுவாதிட்டானமும், பத்திதழ்த்தாமரை வடிவாகிய மணிபூரகமும், பன்னீரிதழ்த்தாமரை வடிவாகிய அநாகதமும், அவற்றின் மேல் நின்ற பதினாறிதழ்த்தாமரை வடிவாகிய விசுத்தியும், ஆகிய இவற்றின் மூலத்தைத் தரிசித்து அங்கங்கே முடிந்த நிலையெய்தி இவற்றின் முதலாயுள்ள ஈரிதழ்த் தாமரை வடிவாகிய ஆஞ்ஞையில் காலத்தை வென்றவனுகிய சிவபெருமானுடைய திருவடிகளைக் கண்டு வழிபடும் பேறும் உளதாம்” என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும். ஆறு ஆதாரங்களையும் முறையே தரிசித்து ஈரிதழ்த் தாமரையாகிய ஆஞ்ஞையில் (புருவ நடுவில்) நிலைபெற்று மூலாதார முதல் ஆஞ்ஞை வரை இறைவனைச் சோதிவடிவாகக் கண்டு வழிபட்டால் திருவடி ஞானம் பிறக்கும் என்பதாம்.

நிராதாரம் என்பது, மேற்குறித்த ஆறாதாரங்களைப் பற்றாது மனம் அசைவற்று மெய்ப்பொருளோடு ஒன்றி நின்ற நிலை. மீதானம் - ஆறு ஆதாரங்களுக்கும் மேலே தலையின் உச்சியின் மேற் பன்னிரண்டங்குலம் உயர்ந்த இடம். இஃது ஆயிரவிதழ்த் தாமரை வடிவில் அமைந்துள்ளதெனவும் திருவருள்வடிவாகிய மீதானம் எனப்படும் இவ்விடம் சிவபரம் பொருள் விளங்கித் தோன்றுதற்குரிய சிறப்புடையது

6