பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


எனவும், ஆன்மா சிவயோக நிலையிற் சிவத்துடன் கூடி ஒன்றுதற்குரிய உயர்ந்த நிலை இதுவேயெனவும் கூறுவர் பெரியோர். ‘எமது உச்சி யாரே’ (2-26-1) என ஆளுடையபிள்ளை யாரும், ‘மனத்தகத்தான் தலை மேலான்’ (6-8-5) ‘அப்பூதி குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய்’ (4-12-10) என ஆளுடையவரசும் கூறியருளியது இம் மீதானமே எனக் கொள்ளுதல் பொருந்தும்.

‘ஆதாரத்தாலே நிராதாரத்தே சென்று’ என்றதனால் இங்குக் கூறப்படும் யோகம் ஆதாரயோகம் நிராதாரயோகம் என இரு திறப்படும் என்பதும், ஆதாரயோகம் பயின்றார்க்கே நிராதாரயோகம் கைவரும் என்பதும் இனிது புலனாம். இத்திருவுந்தியார் பொருளை விளக்க எழுந்தது, பின்வருந் திருக்களிற்றுப்படியாராகும்.


22. ஆதார யோகம் நிராதார யோகமென
மீதானத் தெய்தும் விதியிரண்டே-ஆதாரத்
தாக்கும் பொருளாகி யாக்கும் பொருளாமொன்
றாக்காப் பொருளேயொன் றாம்.

இஃது இருவகை யோகத்தின் திறம் உணர்த்துகின்றது.

(இ-ள்) ஆதாரயோகமென்றும் நிராதாரயோகமென்றும் மேலிடமாகிய திருவடியிலே கூடுதற்குரிய நெறிமுறை இருவகைப்படும். அவற்றுள் ஒன்று முற்கூறிய ஆதாரங்களிலே குருவருளால் கற்பிக்கப் பெற்ற தெய்வத் திருவுருவங்களை மனம் ஒன்றித் தியானித்தலாலே கைகூடுவது. மற்றொன்று அங்ஙனங் கற்பித்துக் கொள்ளப் படாமல் திருவருளாலே கை கூடுவது எ-று.

ஆதாரத்து ஆக்கும் பொருளாலே ஆக்கும்பொருள் ஆதார யோகம் எனவும், ஆக்காப்பொருள் நிராதாரயோகம் எனவும் நிரனிறையே பொருள்கொள்க. ஆதாரயோகத்தினைப் பின்வருமாறு தூலம், சூக்குமம், பரம் என மூவகைப்படுத்து விளக்குவர் தில்லைச் சிவப்பிரகாசர்.


௯. ஆக்கிலங் கேயுண்டாய் அல்லதங் கில்லையாய்ப்
பார்க்கிற் பரமதன் றுந்தீபற
பாவனைக் கெய்தாதென் றுந்தீபற.

இஃது ஆதாரயோகத்தின் இயல்புணர்த்துகின்றது.