பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


அகத்தே கற்பித்துக் கொண்ட திருவுருவத்தினை இடைவிடாது தியா வித்தல். அணு-ஆன்மா. அணு நெகிழப் பார்த்தலாவது தற்போதங் கெடத் தியானித்தல். இவன் - ஆன்மா. அவன் இறைவன். ஆகை - ஆதல், ஏகம் ஒன்றாகிய பரம்பொருள்.

 “இன்றெனக் கருளி யிருள்கடிந் துள்ளத்
         தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
         நீயலாற் பிறிதுமற் றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தொன்றாந்
         திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றும்நீ யல்லை யன்றியொன் றில்லை
         யாருன்னை யுணர்கிற் பாரே’’

எனவரும் திருவாசகம், அணுவில் அணுநெகிழத் தியானிக்கும் முறையினை அறிவுறுத்தும் திருவருளிலக்கியமாகத் திகழ்தல் உணரத் தகுவதாகும்.



24. கொண்ட தொருபொருளைக் கோடிபடக் கூறுசெயிற்
கொண்டவனும் அப்பரிசே கூறுபடும் - கொண்ட
இருபொருளு மன்றியே இன்னதிது வென்ன
ஒருபொருளே யாயிருக்கும் உற்று.

இஃது ஆதாரயோகத்தின் இயல்பினை நுண்மைநிலையில் வைத்து {ச்சூக்குமமாக) விளக்குகின்றது.

(இ - ள்) தான் தன் அகத்தே தியானிப்பதாகக்கொண்ட பொருளே நுணுகநோக்கிப் பரமாணுவிலும் மிக நுண்ணியதாகக் கூறுபடக்கூர்ந்து தியானிப்பானாயின் அங்ஙனம் தியானித்தலை மேற்கொண்ட அவனும் தன்னால் தியானிக்கப்பெறும் பொருளின் தன்மை போன்ற மிகவும் நுண்ணியனவான். அந்நிலையில் தியானித்தலைக் கொண்ட ஆன்மாவும் தியானத்திற் கொள்ளப்பெற்ற பரம்பொருளும் ஆக இரு பொருளும் என வேறுபடத் தோன்றுதலன்றி, இன்ன தன்மையது. இதுவென்று உணரப்படாத ஒப்பற்ற பரம்பொருளொன்றுமேயாகி அங்குப் பொருந்தித் தோன்றும் எ - று.

கொண்டது ஒருபொருள் என்றது தியானிப்பதாக அகத்துட் கொண்ட ஒப்பற்ற பரம்பொருளை. கோடிபடக் கூறுசெய்தலாவது, அதன் இயல்புகளைப் பலதிறத்தாலும் பலகூறுபடப்பகுத்து ஆராய்தல். கொண்டவன் என்றது, தியானத்தைமேற்கொண்ட ஆன்மாவை