பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


வுடனே எல்லாத் துன்பங்களும் கெட உமையொருபாகளுகிய இறைவன் உயிரோடு உடனாய் நின்று அருள்புரிவான். இவ்வுண்மையைக் கேட்டுணர்வாயாக. எ - று.

திருவைந்தெழுத்தில் சிகரம் சிவத்தையும், வகரம் சத்தியையும், யகரம் சத்தி சிவத்தால் உய்விக்கப்பெறும் ஆன்மா இறைவனுக்கு என்றும் அடிமை என்பதனையும், நகரம் ஆன்மாவைத் தோற்றமில் காலமாகப் பற்றியுள்ள ஆணவமலம் கழலும்படி உயிரின்கண் மறைந்து நின்று செயற்படுத்தும் சத்தியின் கூறாகிய திரோதசத்தியையும், மகரம் அத்திரோத சத்தியாற் கழலுதற்குரிய மலத்தையும், குறிப்பனவாதலால் இவற்றைத் தொகுத்து நோக்கும்வழிச் சிவமும் சத்தியுமே மேற்பட்டு விளங்கும் என்பார், ‘அஞ்செழுத்துமே அம்மை யப்பர் தமைக்காட்டுதலால்' என்றார். அஞ்செழுத்தை ஆறாகப் பெறுதலாவது, குறையுடைய உயிரறிவினாலும் கலையறிவினாலும் உணரவொண்ணாத இறைவனை அம்முதல்வனது திருவருளே கண்ணாகக் கண்டு சிந்தையில் தெளிதற்குத் திருவைந்தெழுத்தே சாதனமாதலின் அதனைக் குருமுகமாகப் பெற்று அதன் பொருளையறிதல் வேண்டும் என்பார், ‘அஞ்செழுத்தை ஆறாகப்பெற்று அறிந்து’ என்றார், ஆறு - வழி, சாதனம். பெறுதல் - ஆசிரியனால் உபதேசிக்கப்பெறுதல்.

வேம்பாகிய கைப்புப்பொருளையே தின்று பழகிய புழு கரும்பினைத் தின்று அதன்சுவையில் ஈடுபட்ட நிலையிலும் பழைய பழக்கவாதனையால் வேம்பினேயே மீண்டும் சுவைத்தற்கு எண்ணுமாறுபோல உலகப் பொருளை அசத்து எனக்கண்டு நீங்கிய உயிர், சிவஞானத்தால் மெய்ப்பொருட்காட்சி நேர்பட்டவிடத்தும் பழக்கவாதனையால் பண்டைச் சிற்றுணர்வைநோக்கி நிற்றல் இயல்பாதலின் அங்ங்னம் புறத்தே செல்ல நோக்குவதாகிய தன்னறிவைப் புறத்தே செல்லாதபடி மடக்கி அகத்தே ஒருகுறியின்கண் நிறுத்தி நிட்டைகூடும்படி திருவைந்தெழுத்து ஓதுமுறைமையின்வைத்துச் சிந்திக்கச் சிந்திக்க அச்சிந்தனை, உலகவாதனையாகிய புறநோக்கத்தைப் பற்றறக்கெடுத்து ஞானத்திரளாகிய மெய்ப்பொருளை இனிது விளக்கித் தற்போதம் கெடக் குறைவிலா நிறைவாகிய அப்பொருளில் ஆன்மாவை ஒன்று படுத்தும் என்பார் ‘அஞ்செழுத்தை ஓதப்புக்கு உள்ள மதியுங் கெடில் உமைகோன் கேதம் அறவந்து அளிக்கும்’ என்றார். ஒதப்புக்கு - ஓதப்புகுதலால். உள்ளம் - ஆன்மா. ‘மதி’ என்றது, குறையுணர்வாகிய உயிரறிவினை, கேதம் - பிறவித்துன்பம், அற - ஒழிய,

இத்திருக்களிற்றுப்படியார் வெண்பாவை அடியொற்றித் திருவைந் தெழுத்தோதிப் பயன்பெறும் திறத்தினை விளக்குவது,

அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டரனை
அஞ்செழுத்தால் அர்ச்சித் திதயத்தில் - அஞ்செழுத்தால்
குண்டலியிற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கில்
அண்டனாம் சேடனாம் அங்கு.

(சிவஞானபோதம் சூ 9: அதிகரணம் 3.)