பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

51


ணுடம்பும் ஏழுதாதுவும் ஆறாதாரமும் ஐந்துபொறியும் நாலுகரணமும் மூன்று மண்டலமும் இரண்டு வினையும் எனப் பெயர்பெற்று, இவற்றை ஒன்றெனப் போர்த்த புறத்தோலுமாக ரூபிகரித்து (உருவு கொண்டு) பிராரத்தமளவுந் தன்னுடைய தேகத்தில் உந்திச் சக்கரத்தின் மேலே, கிடந்து, ஆறுமாதமுதல் உந்திநாளத்தாலே மாதாவினிடத்திலே அன்னரசமுங்கொண்டு, அவ்வன்னரசத்தின் மிகுதியாலே சுழுமுனை நாடி அடைபட்டு இடையும் பிங்கலையுந்திறந்து, பிராண வாயு புகுந்து மேல்நோக்கி, நாசித்துவாரங்களாலே விட்ட எழுத்தாலே நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்தறுநூறு சுவாச உச்சாரணந்தோன்றி, முப்பத்திரண்டு நூறாயிரத்து நாற்பதினாயிரம் உருச்சென்றவாறே உதரகன்மந் தொலைந்து மாதாவிடத்துண்டான பிராண வாயுவிலே தம்பிரானுடைய காருண்ணியத்தாலே சத்தி அதிட்டித்துக் கொண்டு, இந்தச் சத்திபலத்துடனே வாயுவானது பிரஞ்ஞையை (உணர்வினை)ப் பூமியிலே பதிவிக்கவேண்டிப் பிரஞ்ஞாபத்தியமென்னும் பெயர்பெற்று, இவனுடைய போதம் போலத் தேகமுங் கீழ்நோக்கி விழும்படி தன்னுடைய பலத்தாலே தலைகீழாகத் தள்ளிப் பூமியில் வந்தபின்பு, தேகத்துக்கு அடுத்த கன்மங்களாலே புசிப்புக்களைக்கருதி, இந்திரியங்களாகிய மூலைகளிலேயிருந்து விடயங்களைப் புசித்துப் புசிப்பொழிந்தால், இவனுடைய போதமானது கீழ்நோக்கிச் சாக்கிரமுதல் அதீதம் அளவாக அவத்தைகளுக்கடுத்த தானங்களாகிய மூலைகளிலே அடைந்தும், இப்படி இரவுபகல் இந்த மூலைகளிலுண்டான இருளினாலே மறைந்து விகற்பித்து மயங்கியும் இப்படிப் பொய்ப்பிரகாசமான சுகதுக்கங்களில் அழுந்தாமல் கீழ்நோக்கிய போதத்தை ஒழித்து, உண்மையை யுணர்த்தி, மேலாகிய பிரகாசமான பரமாகாச வெளியிலே விழித்துப் பரபோகத்தில் அழுந்தும்படி கூட்டுவித்த உபாயகுரு மிகவும் அளவிடப்படாத பெருமையையுடைய தம்பிரானாவார். அரிய தவத்திலே நின்று வழிபட்டவர்க்கு வேண்டும் வரங்களைக் கொடுக்கவல்ல கர்த்தாவுமாவார்”.

எனத் தில்லைச் சிற்றம்பலவர் இத்திருவுந்தியாருக்கு எழுதிய விளக்கவுரை உணர்ந்து இன்புறத்தகுவதாகும். “தத்துவங்களாகிய மூலைகளிலே கிடந்த ஆன்மாக்களைச் சிவாநுபவமாகிய முற்றத்திலே கொண்டுவந்து விட்டவர் மிகவும் பெரியவர்; அந்தப் பெரியவருந் தவத்தினாலே காணப்பட்ட பெரியவர்” எனச் சுருக்கமுந் தெளிவுமுடையதாக அமைந்தது இதன் பழையவுரையாகும்.

தத்துவங்களாகிய மூலைகளிலே ஒடுங்கிக்கிடந்த ஆன்மாக்களைச் சிவாநந்தமாகிய முற்றத்திலே கொண்டுவந்து விட்ட குருவினது திருவருட்பெருமையினை விரித்துரைப்பது, பின்வருந் திருக்களிற்றுப்படியாராகும்.