பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


28. பேசாமை பெற்றதனிற் பேசாமை கண்டனரைப்
பேசாமை செய்யும் பெரும்பெருமான்-பேசாதே
எண்ணொன்றும் வண்ணம் இருக்கின்ற யோகிகள்பால்
உண்ணின்றும் போகான் உளன்.


இது, நிராதாரயோகத்திற்குரிய மோனயோகம் ஆமாறிதுவென உணர்த்துகின்றது.

(இ - ள்) பேசாமையாகிய திருவருளைப்பெற்று அந்த அருளாலே வாயாற் பேசவொண்ணாத சிவனைக் கண்டவர்களுக்கு வெளியிட்டுரைக்க வொண்ணாத சிவாநுபவத்தை வழங்கி மோன நிலையினராகச் செய்தருளும் தன்னிகரற்ற தலைவனாகிய இறைவன், புறத்தே உரையாடாது மனம் தன்கண் ஒன்றியடங்கும் வண்ணம், சிவயோகநிலையில் இருக்கின்ற யோகியரிடத்திலே அவர்தம் நெஞ்சத்துள் நின்றும் நீங்காது. அவர்தம் நெஞ்சத்தே நிலைபெற்றுள்ளான் எ - று.

இதன்கண் உள்ள பேசாமை மூன்றனுள் முன்னது, திருவருளையும், இரண்டாவது சொல்லின் எல்லையைக் கடந்த சிவபரம்பொருளையும், மூன்றாவது இவ்வாறிருந்ததென்று வெளியிட்டுரைக்கவொண்ணாத சிவாதுபவமாகிய மோனநிலையையுங் குறித்து நின்றன. இனி, முன்னது பேசாமையாகிய உபாயத்தையும், இரண்டாவது சிவபரம் பொருளையும், மூன்ருவது பின்பு ஒரு சரீரத்திற்புகுந்து பேசாமையாகிய பிறப்பற்ற தன்மையினேயும் குறிப்பன எனக்கொண்டார் தில்லைச் சிற்றம்பலவர். பேசாதே எண் ஒன்றும் வண்ணம் இருத்தலாவது, புறத்தே யாவரோடும் உரையாடாது சித்தத்தைச் சிவன்பாலே வைத்து மோனநிலையில் இருத்தல். உளன் - உள்ளத்தின்கண் நீங்காது எழுந்தருளியுள்ளான். பெரும்பெருமான் . தன்னொப்பா ரில்லாத சிவபரம்பொருள். ‘பெரும்பெருமான் என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும் பெருமான்’ என்பது திருவாசகம்.

'மூலையிருந்தாரை முற்றத்தேவிட்டவர் தவத்தில் தலைவர்’ என்னும் இத்திருவுந்தியாரை அடியொற்றியது.

"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட்
டன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே”

எனவரும் சிவஞானபோத எட்டாஞ் சூத்திரமாகும்.


க௩. ஓட்டற்று நின்ற வுணர்வு பதிமுட்டித்
தேட்டற் றிடஞ்சிவம் உந்தீபற
தேடும் இடமதன் றுந்தீபற.