பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருச்செந்திலாண்டவன் துணை


திருவுந்தியாரும் - திருக்களிற்றுப்படியாரும்


முன்னுரை


தமிழகத்துத் தோன்றி வளர்ந்த மெய்யறிவு நூல்களுள் சைவ சித்தாந்த உண்மையினை விரித்துரைக்கும் திருவுந்தியார் திருக்களிற்றுப் படியார் முதலிய பதினான்கு நூல்களும் சித்தாந்த சாத்திரம் எனச்சிறப்பு முறையில் போற்றிப் பயிலப்பெற்று வருவதை அறிஞர் பலரும் நன்குணர்வர். சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கினையும் அவை தோன்றிய முறையே தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது,

“உந்தி களிறு வுயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம்-வந்தஅருட்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்ப முற்று.”


எனவரும் பழைய வெண்பாவாம். இப்பதினான்கு சாத்திரங்களையும் மெய்கண்ட சாத்திரமென வழங்குதலும் உண்டு. இங்குக் குறித்த மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள் திருவுந்தியாரும் திருக்களிற்றுப் படியாரும் சிவஞான போதத்திற்குக் காலத்தால் முற்பட்டன என்பது பேரறிஞர் பலரும் ஆராய்ந்து கண்ட உண்மையாகும். பதினான்கு சாத்திரங்களையும் தொகுத்துக்கூறும் “உந்திகளிறு” என்னும் இவ் வெண்பாவிலும் திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூலும் உயர்போதமாகிய சிவஞானபோதத்திற்கு முன்

i -