பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


இனி, இப்பாடலின் மூன்றாமடிக்குக் ‘காலங்கள் செல்லாத காதலுடனிருத்தி’ எனப்பாடங் கொண்டு, ‘மூன்றின் காலங்களையுங் கண்டு காலங்கள் செல்லாத உணர்வரிய காதலுடன் இருத்தி’ எனக் கொண்டு கூட்டி, “பாசம், ஆன்மா, அருள் இவை மூன்றினுடைய அதிகார காலங்களை விசாரித்தறிந்து இந்தக் காலங்கள் செல்லாத, பெத்தனால் அறிதற்கரிதாகிய விருப்பத் தோடுங் கூடியிருப்பை” என உரைவரைவர் பழையவுரையாசிரியர்.

திருக்களிற்றுப் படியாரில் 30, 31 ஆம், பாடல்கள் பின் முன்னாக மாறி நின்றன எனக் கருதவேண்டியுளது.


கரு. பற்றை யறுப்பதோர் பற்றினைப் பற்றிலப்
பற்றை யறுப்பரென் றுந்தீபற
பாவிக்க வாராரென் றுந்தீபற.

இஃது, மேற் கூறியவாறு உடந்தையுடனே யுணருமா றிதுவென உணர்த்துகின்றது.

(இ-ள்) பற்றுக்களை யறுக்கத்தக்க திருவருளாகிய பற்றினை ஆன்மாப் பொருந்தி அந்த ஞானமயமாகியே நிற்கின், அப்பொழுதே ஞானமயமாய் நிற்கின்றோம் என்கிற உயிருணர்வுப் பற்றையும் அறுத்துச் சிவபெருமான் தானாக்கியே விடுவர்; கூடவேண்டுமென்று உயிருணர்வாற் பாவிக்கின் அப்பாவனைக் குட்பட்டு வரமாட்டார் என்றறிக. எ-று.

இதன்கண் முதலிலுள்ள ‘பற்று’ என்பது, உடல்கருவி முதலிய எனது என்னும் புறப்பற்றினையும், ‘பற்றையறுப்பதோர்பற்று’ என்றது எல்லாவற்றுக்கும் பற்றுக் கோடாகிய திருவருளையும், ‘அப்பற்று’ என்றது, திருவருளைப் பற்றினேன்யான் என எண்ணும் உயிருணர்வாகிய யான் என்னும் அகப்பற்றினையும் குறித்து நின்றன. பாவித்தல் - மனத்தாற் கற்பித்துக் காணமுயலுதல். ‘கற்பனை கடந்த சோதி’ என்பார், பாவிக்க வாரார் என்றார்.


இத்திருவுந்தியார் ‘துறவு’ என்னும் அதிகாரத்திலுள்ள,

பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (350)

எனவரும் திருக்குறளை அடியொற்றியமைந்துள்ளமை காணலாம்; “எல்லாப் பொருளையும் பற்றி நின்றே அவற்றில் தோய்வற நிற்கும் திருவருளைப் பற்றுக்கோடாக மனத்துட் கொள்க. தோற்றமில் காலமாகப் பிணித்துள்ள பாசத் தொடர்பு நின்னை விட்டு நீங்குதற்