பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


“பற்றாங்கவை யற்றீர் பற்றும் பற்றாங் கதுபற்றி
நற்றாங்கதி யடைவோ மெனிற் கெடுவீர் ஓடிவம்மின்
தெற்றார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை யிறைசீர்
கற்றாங்கவன் கழல் பேணின ரொடுங் கூடுமின் கலந்தே”

எனவரும் திருவாசகம் இங்கு ஒப்புநோக்கி யுணரத் தகுவதாகும். இதன்கண் ‘பற்றும் பற்று ஆங்கது பற்றிப் பற்று ஆங்கவை யற்றீர் நற்றாங் கதியடைவோமெனிற் கெடுவீர்' என்றது, திருவருளைப் பற்றி உலகப்பற்றினை யறுத்த நீவிர் உயிருணர்வாகிய தற்போதத்தினால் சிவபரம் பொருளையடைவோம் எனக் கருதுவீராயின் சிவபோகத்தினே யிழப்பீர் என்றவாறாம்.


க௬. உழவா துணர்கின்ற யோகிகள் ஒன்றோடுந்
தழுவாமல் நிற்பரென் றுந்தீபற
தாழ்மணி நாவேபோல் உந்தீபற.

இஃது யோகிகள் ஒன்றினும் பற்றாமல் நிற்குமா றிதுவென உவமை காட்டி உணர்த்துகின்றது.

(இ~ள்) (கருவிகளால் உணர்த்து முறைமையிலும் அவற்றால் உணரும் நிலையாகிய அவத்தைகளிலும்) அழுந்தி முயலாமல் திருவருளாலே சிவனைக்கண்டு வழிபடும் சிவயோகிகள் (எடுத்தவுடம்பினால் முகந்து கொள்ளப்பட்ட நுகர்வினையாலே வினைப்பயன் தம்மைத் தாக்கிய நிலையினும் திருவடிஞானங் கண்ணாக நிற்கையாலே) உலகப் பொருள்களுள் ஒன்றிலுந்தோயாமல் நிற்பார்கள். (தரையில் வைக்கப் பட்ட) தாழ்ந்த நாவையுடைய மணிபோல அசைவும் ஆரவாரமும் அற்றுத் திருவருளோடு ஒன்றியிருப்பார்கள் எ-று.

உழத்தல் - தம்முணர்வாற் பெரிதும் முயன்று உழைத்துப் பயனின்றி அயர்வடைதல். உணர்தல் - திருவருளே கண்ணாகக் கொண்டு உணரப்பெறுதல். தாழ்மணி நாவேபோல் ஒன்றோடுந் தழுவாமல் நிற்பர் என இயையும். தாழ்மணி நாவேபோல் - மேலே கட்டப்பெற்று அசைந்து ஒலிக்காமல் தரையிலே பொருந்தவைக்கப் பட்ட மணியின் நா அசைவற்று ஒலியெழுப்பாதிருத்தல் போல.

இத்திருவுந்தியாரின் உரைவிளக்கமாக அமைந்தது, பின்வருந் திருக்களிற்றுப்படியாராகும்.


32. அறிவறிவாய் நிற்கின் அறிவுபல வாமென்
றறிவி னறிவவிழ்த்துக் கொண்டவ் - வறிவினராய்
வாழ்ந்திருப்பர் நீத்தவர்கள் மானுடரின் மாணவகா
தாழ்ந்தமணி நாவேபோல் தான்.