பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

59


இஃது யானெனதென்னும் பற்றொழித்த சிவயோகிகள் ஒன்றோடுந் தழுவாமல் நிற்குமியல்பினை விரித்துக் கூறுகின்றது.

(இ~ள்) ஆன்மா தனது அறிவினையே எல்லாவற்றையும் அறிதற் குரிய சாதனமாகக் கொண்டு நிற்பின், குறையுணர்வாகிய அதன் அறிவு தான் பற்றிய பொருள்தோறும் அழுந்தி அதுவதுவாய்ப் பலவாய்ச் சிதறி வேறுபடுவதே அதனியல்பென்று குருவின் அருளால் உணர்ந்து தற்போதப் பிணிப்பினின்றும் விடுபட்டு அங்ஙனம் விடுபடுதற்குரிய திருவருள் ஞானமேயாய் அதனோடு ஒற்றித்து நிற்றலாலே சிவனைப் பெற்றுத் தாமும் அச்சிவமேயாய் இருப்பார்கள்; மானிடப் பிறப்பிலுள்ளாரில் யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் விட்டவர்கள். நிலத்திலே தாழவைத்த மணியினது நாவேபோல அசைவற்றிருக்கிற பெருமக்கள் எ - று.

‘உழவாதுணர்தல்’ என்பதற்கு அமைந்த விளக்கமாக இதன் முதலிரண்டடிகள் அமைந்தன. மானுடரின் நீத்தவர்கள், தாழ்ந்த மணிநாவேபோல் வாழ்ந்திருப்பர் என இயையும். அறிவு - ஆன்ம போதம். அவ்வறிவு என்றது, திருவருள் ஞானத்தினை. மணிநா அசைவற்று ஒலியடங்குதற்கு நிலம் ஆதாரமாதல்போன்று நீத்தவர்கள் தற்போதங்கெட அசைவற்றிருத்தற்குத் திருவருள் ஆதாரமாதல் இனிது புலனாம்.


க௭. திருச்சிலம்போசை யொலிவழியே சென்று
நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற
நேர்பட அங்கேநின் றுந்தீபற.

இது, நிராதாரயோகத்தில் நிற்பார்க்கு நிகழும் திருவருள் அடையாளம் இதுவெனக் கூறுகின்றது.

(இ-ள்) போதுசெய்யாநடமாகிய அனவரததாண்டவம் புரிந்தருளும் திருவடியில் உள்ள திருச்சிலம்பாகிய திருவருளினுடைய ஓசையொலி வழியே சென்று மீதானத்தே ஆடல் புரிந்தருளும் கூத்தப் பெருமானைக் கண்டு கும்பிடுவாயாக. அப்பரம்பொருள் வெளிப்பட்டுத் தோன்ற ஐம்புலவழியாகிய சிறுநெறியிற் செல்லாது திருவருளாகிய செந்நெறியில் நிலைத்து நிற்பாயாக எ-று.

இறைவன் திருவடியிலுள்ள சிலம்பும் அதன்கண் இருந்து தோன்றும் ஒசையொலியும் முறையே பரவிந்தும் பரநாதமும் என்பர் தில்லைச் சிற்றம்பலவர். திருவடிச் சிலும்பொலி அகஞ்செவிக்குப் புலனாம் நிலையில் ஒசையெனவும், உயிருணர்வுக்குப்புலனாம் நிலையில் ஒலியெனவும்