பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


பெயர்பெறும் என்பார், ‘திருச்சிலம்போசை யொலி’ என்ருர், ‘ஒசை யொலியெலாம் ஆளுய் நீயே’ என இறைவனைப் போற்றுவர் தாண்டக வேந்தர். திருச்சிலம்போசை யொலிவழியே சென்று நிருத்தனைக் கும்பிடுதல் என்பது, உலக ஆரவாரத்தினின்றும் நீங்கி அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்று ஐம்புலனும் அடக்கி ஞானமே வடிவாகத் திகழும் இறைவனைத் தமது நெஞ்சத்தாமரையிலே வைத்து வழிபடுதல். அங்ஙனம் வழிபடும் சிவயோகநிலையினராகிய செம்புலச் செல்வர்க்குத் திருவருள் மயமாகிய பத்துவகை ஒலிகள் அவர்தம் அகத்தே தோன்றும் என்பதும், தற்போதங்கெட அத்தகைய திருவருளின் ஒலிவழியே சென்று கும்பிடுவார்க்குக் கூத்தப்பெருமான் நேர்படத் தோன்றியருள்புரிவன் என்பதும், இங்னம் உலக ஆர வாரத்தினின்றும் நீங்கிச் சிவயோக நிலையினின்று இத்தகைய திருவருள் ஒலியினத் தம் அகத்தே கேட்டலென்பது, அவனருளாலே அவன்தாள் வணங்கும் இயல்பினர்க்கன்றி ஏனையோர்க்கு இயலாதென்பதும் ஆகிய யோக நுட்பங்களை,

மணிகடல் யானை வார்குழல் மேகம்
மணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ்
தனிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கவொண் ணாதே (606)

எனவரும் திருமந்திரப்பாடலில் திருமூலதேவநாயனர் தொகுத்துக் கூறியுள்ளமை காணலாம். 'மணி, கடல், யானை, இசைவளர்தற் கிடனாகிய வேய்ங்குழல், மேகம், நீலமணி போலும் நிறமுடைய வண்டு, (தேன்நுகரும் தும்பி, வளை (சங்குi, பேரிகை, யாழ் என மிகவும் நுண்ணியவாய் மெல்லியவாய்த் தோன்றுகின்ற இப்பத்து வகை யொலிகளும் இறைவனைப் பணிந்து போற்றும் தியானமுடைய செம்புலச் செல்வர்க்கல்வது ஏனையோரால் செவிப்புலனாற் கண்டுணர்தல் இயலாது என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும்.


‘நன்மணிநாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே’

’வீணைமுரன்றெழும் ஒசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே’

'சங்குதிரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன வாகாதே’

என மணிவாசகப்பெருமான் அருளிய திருவாசகத் தொடர்களும்,

‘தூங்கிருள் நடுநல்யாமத்தே,
மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன்'

எனக்கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பாத்தொடரும் அப்பெருமக்களது சிவயோகநிலையினை நன்கு புலப்படுத்துவன.