பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

65


இது திருவருள் ஞானத்தாற் சிவனைக்கூடவேண்டுமென்று இறைவனது அருள்வழி நிற்பார்க்குச் சிவம் விரைந்து தோன்றுமாறு உணர்த்துகின்றது.

(இ-ள்) நின் கருத்துக்கு மாறுபட்டு உன்னை மயக்க விகற்பங் களில் ஆழ்த்தி வரும் வஞ்சனை வாய்ந்த ஐம்புலன்களின் வழியே நீயும் உலகப்பொருள்களிற் கூடிநின்று சலிப்படையாதே. திருவருள் உன்னோடு கூடிநின்ற முறைமைபோல நீயும் அத்திருவருளையுணர்ந்து, அந்த ஞானமேயாகி இரண்டற நிற்பாயாக. அங்ஙனம் நிற்பாயாயின் அப்பொழுதே இந்த ஞானத்திற்கு முதலாகிய சிவம் உனக்குமுன் தோன்றாநிற்கும் எ-று

அன்றுதல் - மாறுபடுதல். நின்றபடியே நிற்றலாவது இறைவனது திருவருள் தோற்றமில் காலமாக உயிர்களோடுடனாயிருந்தும் தன்னைப் புலப்படுத்திக் கொள்ளாது நின்றாற் போன்று, திருவருளோடு உடனாய்நின்று உணரும் ஆன்மாவும், தன்னைப் புலப்படுத்திக் கொள்ளாது சுட்டுணர்வுகெடத் திருவருளின்வழியடங்கி நிற்றல். இங்ஙனம் நின்றபடி நிற்றலாகிய இத்தொடர்ப்பொருளையே,

‘அவனே தானே யாகிய அந்நெறி
ஏகனாகி இறைபணி நிற்க’

எனச் சிவஞானபோதம் பத்தாஞ் சூத்திரத்து மெய்கண்டார் உவமையாக எடுத்தாண்டுள்ளமை இங்கு ஒப்புநோக்கியுணரத்தகுவதாகும்.

அடியார்கள் தன்னை அன்பினாற் கருதத் தொடங்கிய அந்நிலையிலேயே விரைந்து முன்னின்றருளும் பேரருளாளன் இறைவன் என்பதனை,

“எம்பிரான் என்றதேகொண் டென்னுளே புகுந்து நின்றிங்
கெம்பிரான் ஆட்ட ஆடி என்னுளே யுழிதர் வேனை
எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால்
எம்பிரான் என்னி னல்லான் என்செய்கேன் ஏழையேனே”

(4–76–3)

எனவருந் திருப்பாடலில் அப்பரடிகள் விளக்கியுள்ளமை இங்கு ஒப்ப வைத்து உணர்தற்பாலதாகும்.


உ௰. இரவு பகலில்லா இன்ப வெளியூடே
விரவி விரவிநின் றுந்தீபற
விரைய விரையநின் றுந்தீபற.

9