பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

67


அறியப்படும் சிவமும் இல்பொருளாகிய அசத்தாய் முடியும். கருவிகள் இல்லாத நிலையிற் காணப்படுவது சிவபரம்பொருளென்றால் ஆன்ம அறிவிற்கு இன்றியமையாத அறிதற்கருவி எதுவுமில்லாமையால் அந்நிலையிலும் சிவத்தைக் காணுதல் இன்மையின் அவ்விடத்தும் சிவம் இல்பொருளாய் விடும். ஆதலால் உயிருணர்வினால் அறியப்படும் பொருளும் எவ்வகையாலும் அறியப்படாதபொருளும் முறையே அசத்து எனவும் பாழ் எனவும் கூறப்படும் இவ்விருவகையுட்படும். இங்ஙனம் ஆன்ம அறிவினால் உண்டு எனவும் இல்லையெனவும் பேசப்படும் இவ்விருதிறத்தினும் அடங்காது தனது திருவருளே துணையாகக் கூடி நுகர்தற்குரிய இன்புருவாய் உயிர்கட்குஇனிய அனுபவப்பொருளாகிய இறைவனைப் பேரன்பினால் இடைவிடாது நினைந்து போற்றுவாயானால் பேரருளனாகிய அம்முதல்வன் தனது அருளால் உன்னை இரண்டறக்கூடி நிற்பன் எ-று.

உண்டெனல்-ஆன்மா தன்னறிவினால் சிவத்தினையறிந்து உள்பொருள் எனக் கூறல். இல்லையெனல் அப்பொருள் உயிரறிவுக்கு அகப்படாமையின் அதனை இல்பொருளென்றல். சிவம் உயிரின் சுட்டறிவினால் உணரப்படும் பொருள் என்றால் சுட்டறிவினால் அறியப்படும் பொருளனைத்தும் ஒருகாலத்து உளதாய்த்தோன்றிப் பின்னொரு காலத்து இல்லையாய் மறையும் அழிபொருளாதல் போலச் சிவமும் அழியுமியல்பினதாகிய அசத்துப் பொருளாய் விடும். சிவம் உயிரறிவினால் அறியவொண்ணாததாயின் முயற்கோடு ஆகாயப்பூப் போன்று இல்பொருளாய் விடும் என்பார், ‘உண்டு எனின், இல்லாமை உண்டாகும். இல்லையெனின் இல்லாமை உண்டாகும் ஆனமையின் ஒரிரண்டாம்’ என்றார். இவ்வடியில் நடுநின்ற ‘இல்லாமை’ என்பதனை முன்னும் பின்னும் இயைத்துப் பொருள்கொள்க. இது தாப்பிசைப் பொருள் கோள். -

‘இவை தவிர்ந்த இன்பம்’ என்றது.உயிருணர்வினால் உணரப்படும் அசத்தாந்தன்மையும் ஒருவாற்றானும் அறியப்படாத பாழாந்தன்மையும் நீங்கித் தனது திருவருளால் உயிர்கட்குப் பேரின்ப அநுபவப் பொருளாகத் தோன்றுமியல்புடைய என்றுமுள்ள சத்தாகிய சிவத்தினை. உன்னுதல்-அன்பினால் இடைவிடாது நினைந்து போற்றுதல். மாணவனாகிய நீயும் அம்முதற்பொருளைப் பேரன்பினால் நினைந்து போற்றுவாயாயின் இன்புருவாகிய அம் முதற்பொருள் நின்னுடன் பிரிவின்றி இரண்டறக்கூடி நின்று பேரின்பத்தை வழங்கும் என அறிவுறுத்துவார், ‘உன்னில் அவன் உன்னுடனே ஆம்’ என்றார்.