பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


இத்திருக்களிற்றுப் படியாரை அடியொற்றியமைந்தது,

“உணருரு அசத்தெனின் உணரா தின்மையின்
இருதிறன் அல்லது சிவசத் தாமென
இரண்டு வகையின் இசைக்குமன் னுலகே”

எனவருஞ் சிவஞானபோத ஆறாஞ் சூத்திரமாகும்.

“தம்முணர்வின் தமியாகிய முதற்பொருள் உயிருணர்வால் அறியப்படும் இயல்பினையுடையதென்றால், அங்ஙனம் உணரப்படும் உலகப் பொருளாகிய அசத்தாம்; எவ்வாற்றானும் உணரப்படாத இயல்பினையுடையதென்றால், முயற்கோடு போலச் சூனியப் பொருளாய்விடும். ஆதலால் அசத்தும் சூனியமுமாகிய இவ்விரு பகுதியுமன்றிப் பாசஞான பசுஞானங்களால் அறியப்படாமையும் பதிஞானம் எனப்படும் திருவருள்ஞானம் ஒன்றினாலேயே யுணரப்படுதலும் ஆகிய இரண்டு வகையானும் சிவசத்தாம் எனக்கூறுவர் மெய்யுணர்வின் நிலைபெற்றுயர்ந்தோர்” என்பது இதன் பொருளாகும்.

நிராதார யோகத்தினை முடித்துக்கூறும் இத்திருக்களிற்றுப் படியாரிலுள்ள ‘உண்டெனின் இல்லாமையுண்டாகும்’ என்பதனை யடியொற்றி ‘உணராதெனின் அசத்து’ எனவும் ‘இல்லையெனின் இல்லா மையுண்டாகும்’ என்பதனை யடியொற்றி ‘உணராதெனின் இன்மையின்’ எனவும், ‘உண்டு இல்லையென்ற இவை தவிர்ந்த இன்பம்' என்பதனை யடியொற்றி ‘இருதிறன் அல்லது சிவசத்தாம்’ எனவும் மெய்கண்ட தேவநாயனார் பதிப்பொருளின் சொரூபஇலக்கணம் எனப்படும் சிறப்பியல்பினை யுணர்த்திய திறம் ஒப்புநோக்கியுணர்ந்து போற்றத் தகுவதாகும்.


உக. சொல்லும் பொருள்களும் சொல்லா தனவுமங்
கல்லனாய் ஆனானென் றுந்தீபற
அம்பிகை பாகனென் றுந்தீபற.


இது, மேற்சொருப இலக்கணமென்னுந் தன்னியல்புணர்த்தி இனித் தடத்த இலக்கணம் என்னும் பொதுவியல்பு உணர்த்துகின்றார்.

(இ-ள்) சொல்லால் அளவுபடுத்தி உரைக்கத்தக்க சொரூபாதிகளாயுள்ள பொருள்களும், வாக்கால் உரைக்கப்படாத முயற்கோடு போன்ற இல்லாத பொருள்களும் ஆகிய இவையிரண்டும் அல்லாதவனுமாய், உரைமனங்கடந்த நிலையிலே நின்று உணரத்தக்க தன்னியல்பினனாய் உள்ளான் ஒருவன். அவனே அருளாகிய அன்னையின் நாயகனாவன் எ-று.