பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

69



சொல்லும் பொருள்களாவன, ஆன்மபோதத்தாற் சுட்டிக்கூறப்படும் மாயாகாரியமாகிய அசத்துப்பொருள்கள்.

சொல்லாதன, முயற்கோடுபோலும் இல்பொருள்கள். அல்லனாகுதல், இவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி நிலவு சீரமலனாகி எல்லாவற்றையுங் கடந்து அப்பாலாதல்; ஒன்றிலுந் தோய்வின்றிச் சிவமாய் நிற்றல். ஆனான் என்றது, சிவனது அருட்சத்தியாய் உலகுயிர்களோடு ஊடுருவிக் கலந்து தங்குதலை. இங்ஙனம் பொருள்தோறும் கலந்து நிற்றற்குத் துணையாகிய இறைவனது திருவருளே அம்பிகை என்பதுணர்த்துவார் “அம்பிகை பாகன்” என்றார்.

“அவையே தானே யாயிரு வினையிற்
போக்குவரவு புரிய வாணையின்
நீக்கமின்றி நிற்குமன்றே.”

எனவரும் சிவஞானபோத இரண்டாஞ்சூத்திரம், “இறைவன் கலப்பினால் உடலின் உயிர்போல் அவ்வுயிர்களேயாய், பொருட்டன்மையால் கண்ணின் அருக்கன் போல் அவற்றின் வேறுமாய், உயிர்க்குயிராதல் தன்மையால் கண்ணொளியின் ஆன்மபோதம்போல உடனுமாய் நின்று ஆணையென்னும் பரியாயப் பெயருடைய தனது சிற்சத்தியான் வரும் இருவினைகளால் அவை இறத்தல் பிறத்தல்களைப் புரியும்வண்ணம் அவ்வாணையிற் பிரிப்பின்றிச் சமவேதமாய் நிற்பன்,” என இறைவனது தடத்தவிலக்கணம் (பொதுவியல்பு) உணர்த்துவதாகும்.


37. தூல வுடம்பாய முப்பத்தோர் தத்துவமும்
மூல வுடம்பாம் முதல்நான்கும்-மேலைச்
சிவமாம் பரிசினையுங் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்தார்
பவமாம் பரிசறுப்பார் பார்.

இஃது இறைவனது பொதுவியல்பினை விளக்குகின்றது.

(இ-ள்) ஆன்மா, வினைப்பயனை நுகர்தற்பொருட்டுத் தனுகரண புவனபோகங்களாய் அமைந்த ஆன்மதத்துவம் இருபத்து நான்கும், அவற்றைப் புசித்தற்குத் துணையாகிய கால நியதிகளும், உயிரின் விழைவு அறிவு செயல்களைத் தூண்டுகின்ற கலை வித்தை அராகங்களும் ஆன்மாக்களைப் போகங்களிலே யழுத்தும் மூலப்பகுதியும், மயக்கத்தைத் தரும் அசுத்தமாயையும் ஆகிய வித்தியாதத்துவங்கள் ஏழும் ஆகத் துாலவுடம்பிலே பொருந்தி நிற்கிற தத்துவம் முப்பத்தொன்றும் உள்ளே மூலவுடம்பாய் நின்று இம் மாயா தத்துவங்களைத் தூண்டிச் செலுத்துகின்ற விந்து, சாதாக்கியம், ஈசுரம், சுத்தவித்தை ஆகிய