பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


தத்துவம் நாலும், இத்தத்துவங்களுக்குக் காரணமுமாய் ஆன்மாவுக்குப் பிராணனுமாய் நிற்கின்ற சிவதத்துவம் ஒன்றும் ஆகிய இத் தத்துவம் முப்பத்தாறும் ஆன்மா புசிக்கைக்குத் துணைக்காரணமாய்த் டதூல சூக்கும பரமாய் நிற்கையால், இந்த முறைமையை ஆசிரியன் அருளாலே உருவம், தரிசனம், சுத்திகளுடனே பார்த்து நீங்கித், தன்னையும் ஞானத்தையும் சிவனையும் உணர்ந்த ஞானிகளே அநாதியே தொடங்கி வருகிற பிறப்பிறப்புக்களைப் போக்காநின்றவர்கள். ஆதலால், இப்படிப் பார்த்துக் கூடுவாயாக எ-று.


38. எத்தனையோ தத்துவங்கள் எவ்வெவர்கோட் பாடுடைய
அத்தனையுஞ் சென்றங் களவாதே - சித்தமெனுந்
தூதுவனைப் போக்கிப்போய்த் தூக்கற்ற சோதிதனிற்
பாதிதனைக் கும்பிடலாம் பார்.

இப்படித் தத்துவ விசாரணை செய்ய இயலாதவர்களுக்கு வேறேயும் ஓர் உபாயம் அருளிச் செய்கிறார்.

(இ - ள்) சமயவாதிகள் கூறும் கோட்பாடுகளாகிய பல வேறு தத்துவங்களையும் பலசமயத்தார் கொண்டுள்ள தத்துவக் கோட்பாடு களையும் ஆராயப்புகுந்து அவற்றில் மொத்துண்டழியாது சித்த விகாரத்தைப் போக்கிச் சென்று அருள்துணையாக ஞானசத்தியை ஒருபாகமாகவுடைய சிவன்திருவடியிலே அழுந்தி நிற்கலாம். இப்பத்தி நெறியினை விசாரித்துப்பார். எ - று.


39. சாம்பொழுதும் ஏதுஞ் சலமில்லை செத்தாற்போல்
ஆம்பொழுதி லேயடைய வாசையறில் - சோம்புதற்குச்
சொல்லுந் துணையாகுஞ் சொல்லாத தூய்நெறிக்கட்
செல்லுந் துணையாகுஞ் சென்று.

இஃது இங்ஙனம் திருவருளே துணையாகக் கொண்டொழுகும் நிலை யில் உயிர்ச்சார்பு பொருட்சார்புகளிற் பற்றினை ஒழித்தல் வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது.

(இ - ள்) சாவாது உடம்புடன் கூடியிருக்கும் பொழுதிலேயே இறந்தவர்களைப் போன்று உயிர்ச்சார்பு பொருட்சார்புகளில் வைத்த ஆசை முற்ற அற்றொழியுமாயின், அங்ஙனம் பற்றற்ற சிவஞானிகளுக்குச் சாக்காடு வந்தடுத்த காலத்தும் எல்லாஞ் சிவரூபமாவதன்றித் தத்துவங்களாலுள்ள மனக்கலக்கம் எதுவும் ஏற்படாது. இத்தகைய பற்றறுதி உயிர் தன்பணி நீத்தல் என்ற நிலையை யடை