பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


இத்திருக்களிற்றுப்படியார்,

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்” (திருக்குறள்-362)

எனவரும் திருக்குறளுக்குப் பொருந்திய சிறந்த விளக்கவுரையாக அமைதுள்ளமை அறியத் தகுவதாகும். தோற்றமில் காலமாகப் பிறப்புப் பிணி மூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்குப் பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும்பேரின்பம் என்னும் உண்மையுணர்ந்து பிறவாமையாகிய இன்பத்தின் கண்ணே விருப்பந்தோன்றுதல் இயல்பாதலின், அவன் ஒன்றை வேண்டப் புகுவனாயின் பிறவாமை யொன்றனையுமே வேண்டிநிற்பான் என்பார், “வேண்டுங் கால் வேண்டும் பிறவாமை” என்றார். இவ்வுலகிற் சிற்றின்பங் கருதி ஒரு பொருளை அவாவுவானாயின் அத்தகைய அவா பிறப்பீனும் வித்தாய் மேலும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின் அத்தகைய அவாவறுத்தலே பிறவாமைக்குக் காரணமாதலின் பிறவாமையாகிய அப்பேறும் வேண்டாமை வேண்டத் தானே வரும் என்பார், ‘அது வேண்டாமை வேண்ட வரும்’ என்றார்.

"அவாவென்ப எல்லா வுயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பினும் வித்து’’ (361)

எனவரும் திருக்குறள் எல்லாவுயிர்க்கும் பிறப்பிற்குக் காரணம் அவாவே என்பதனையும் அத்தகைய அவா அறவே பிறவாமை தானே வரும் என்பதனையும் நன்கு புலப்படுத்தல் காணலாம். பிறவாமையே இறைவன்பால் வேண்டத்தக்கது என்பதனை,

“ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக்
கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்” (7-21–2)

“எய்த்தேன் நாயேன் இனியிங்கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் வானோ ரறியா மலர்ச் சேவடியானே.” -(திருவாசகம்)

“இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டே லுன்னையென்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான்மகிழ்ந்துபாடி
அறவாநீ யாடும்போதுன் னடியின்கீ ழிருக்கவென்றார்.”

(- பெரிய. காரைக்காலம்மையார் புராணம்)

எனவரும் ஆன்றோர் அருளிச் செயலால் உணரலாம்.