பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

73


உஉ. காற்றினை மாற்றிக் கருத்தைக் கருத்தினுள்
ஆற்றுவ தாற்றலென் றுந்தீபற
அல்லாத தல்லவென் றுந்தீபற.

இது, மெய்ப்பொருளைக்கூடுதற்கு வேறுமோ ருபாயம் சொல்கின்றது.

(இ-ள்) இடைகலை பிங்கலைகளாற் பிராணவாயு நின்று சலிக்கும் வரையிலும் மனமும் ஆன்மாவும் ஒக்க நின்று சீவிக்கும். ஆகையால் இப்படிச் சலித்துப் புறப்படுகிற காற்று பன்னிரண்டங்குலமளவும் புறத்தே செல்லாமல் உள்ளே சுவறும்படி ஆசிரியன் உரைத்தபடி சாதிக்க மனஅசைவு அற்றுவிடும். இவ்வாறு அசைவற்ற நிலையிலே இவன் கருத்தானது திரிவற்ற செம்பொருளிலே செல்லும். ஆகவே தன்னுடைய கருத்துக்குக் கருத்தாயுள்ள தம்பிரானார் திருவடியிலே மனம் ஒன்றியிருந்து இளைப்பாறுவதே நொசிப்பு எனப்படும் நோற்றலின் ஆற்றலாகும். இவ்வாறு சித்தவிகாரக் கலக்கம் அறாத நிலையிற் கூடுகிறதெல்லாம் நொசிப்பு ஆற்றல் அன்று என்றவாறு.


41. அரண வுணர்வுதனில் அவ்வுணர்வை மாற்றிற்
கரணமுங் காலுங்கை கூடும் - புரணமது
கூடாமையுங் கூடுங் கூடுதலுங் கூட்டினுக்கு
வாடாமையுங் கூடும் வந்து.

இது, சமாதிநிலை கூடுதற்கு உபாயம் கூறுகின்றது.

(இ-ள்) திருவடி ஞானத்தினாலே தன்னுடைய போதத்தை யொழித்தால் அந்தக் கரணமும் வாயுக்களும் தன்வசமாய் அடங்கி நிற்கும். மீண்டும் ஏகதேச வறிவுகூடாமல் (பூரணம்) வந்து தலைப்படும். அங்ஙனம் கூடிய அளவிலே உயிர்நின்ற உடம்பினுக்கு வாட்ட மின்மையும் வந்து சேரும் எ-று.

அரணவுணர்வு என்றது, ஐம்பொறிகளாகிய வேடர்கள் சென்று ஆன்மலாபத்தைக் கவரவொண்ணாது அரண் செய்யும் திருவடி ஞானத்தை. அவ்வுணர்வு என்றது, ஆன்மபோதத்தினை. மாற்றுதலாவது ஒழித்தல். புரணம்- மீளவும். அது- அவ்வேகதேச அறிவு. கூடாமை- மீளத்தாக்காமை. கூடு- உடம்பு, ‘கூட்டைவிட் டுயிர்போவதன் முன்னமே’ என்பது தேவாரம், வாடாமை- வாடியழியாமை. ‘கூற்றங்குதித்தலும் கைகூடும்’ என்பது திருக்குறள். ‘வினைபடும் உடல்நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானமாயினதே’ என்பது திருவிசைப்பா. “அளிதரும் ஆக்கை செய்தோன்போற்றி,” “கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையும் இருப்ப தாக்கினன்” - என்பது திருவாசகம்.

10