பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

79


மாய் ஒன்றி நிற்குந் தவமுடையானை ஏனைய மன்னுயிர்கள் யாவும் பராவுசிவன் எனக் கொண்டு தொழும்” என்பது இதன் பொருளாகும்.


தன் உயிர் - ஆன்மாவாகிய தனக்கு உயிராகிய பரம்பொருள். தான் அற - தான் என்னும் ஆன்மபோதம்கெட. பெறுதல் - சிவத்தோடு ஒட்டி வாழப்பெறுதல்.


உ௫. சித்தமுந் தீய கரணமுஞ் சித்திலே
ஒத்ததே யொத்ததென் றுந்தீபற
ஒவ்வாத தொவ்வாதென் றுந்தீபற.

இஃது இறைவன் திருவடியைத் தொட்டுக் கொண்டு நின்றவர்களே புண்ணிய பாவந் துலையொத்த ஆன்மாக்களாவர் என அருளிச் செய்கின்றது. .

(இ-ள்) திருவருளாலே உயிரானது பசுத்துவம் நீங்கிச் சிவத்துவமாகவுங் குற்றத்தைக் குணம் போல விளைவிக்கின்ற அந்தக் கரணங்கள் பசுகரணத்தன்மைகெட்டுச் சிவகரணமாகவும் இவ்வாறு திருவருளோடு ஒத்துச் சென்று கூடினவர்களே கன்மங்கள் பக்குவத்தையடைந்து இருவினையொப்புப் பெற்ற ஆன்மாக்கள் ஆவர். இவ்வாறு வினைகள் துலையொவ்வாத ஆன்மாக்களுக்கு இறைவன் திருவடியினைக் கூடுதல் ஒவ்வாது எ-று. -


46. துன்பமாம் எல்லாம் பரவசனாய்த் தான்துவளில்
இன்பமாம் தன்வசனாய்த் தானிருக்கின் - என்பதனால்
நின்வசனா யேயிருக்கி னின்னுடனாம் நேரிழையாள்
தன்வசனா யேயிருப்பன் தான்.


இது, சித்திலேயொத்து ஒழுகுதலாகிய ஞானயோகமே சிவயோகமாம்படி அருளிச் செய்கின்றது.

(இ-ள்) ஆன்மா மலமாயை கன்மங்கள் வசப்பட்டு ஐம்பொறி வழியே அலைவானாயின் இவனுக்கு வருகிற நுகர்ச்சிகள் எல்லாம் துன்பமேயல்லாமல் இன்பஞ் சிறிதுமில்லை. பொறிவழிச் செல்லாது தன் வசத்தனாய் அடங்கியிருப்பானானால் இவனுக்கு வருகிற நுகர்ச்சிகள் எல்லாம் இன்பமேயல்லாமல் துன்பம் சிறிதுமில்லை என மெய்ந்நூல்கள் கூறுதலால், நீ பொறிகளின் வசத்தனாகாமல் உன்வசத்தனாய் அடங்கியொழுகுவாயானல் அருள் வசத்தனாயுள்ள இறைவன் உன்னுடனே வந்து பொருந்துவன். எ-று.