பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


“அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் ஆங்கில்லை
அஞ்சும் அடக்கின் அசேதனமா மென்றிட்
டஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே”

(திருமந்திரம்-2033)

எனவரும் திருமூலர் வாய்மொழி இங்கு நோக்கத் தகுவதாகும்.

48 கண்ணுங் கருத்துங் கடந்ததொரு பேறேயுங்
கண்ணுங் கருத்துங் களிகூர-நண்ணி
யடமடக்கி நிற்கும் வடவித்தே போல
வுடனடக்கி நிற்பர்கா ணுற்று.

இது. கருவிகரணங்கள் ஒருகாலும் பொருந்தாதபடி சிவபரம் பொருளோடு ஒன்றியிருக்கும் சிவயோகிகளின் பெருமையினை விரித் துரைக்கின்றது. -

(இ-ள்) எத்தகையோர் கண்ணுக்கும் கருத்துக்கும் அளவுபடாது அப்பாற்பட்டதாய்க் கடந்து நிற்கும் ஒப்புற்ற பொருள் சிவமாயினும் (உலகப் பொருளை நோக்காது பரம்பொருளையே நோக்கியிருக்கும் சிவயோகிகளின்) கண்ணும் கருத்தும் களிகூர அணுகித் தோன்றுதலால், விரிந்து பரவும் தன்மையதாகிய ஆலமரத்தினைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் ஆலின்விதை போன்று அளவிடப்படாத பெரும் பொருளாயினும் தங்கள் உள்ளத்தேயடக்கிக்கொண்டு தங்கள் பசுபோதத்தைவிட்டு இந்தச் சிவத்துடனே கூடியிருப்பார்கள் எ-று

புறத்தேயும் அகத்தேயும் காணப்படும் உருவப்பொருள் அருவப்பொருள் ஆகிய பொருள்கள் அனைத்தையும் கடந்து அப்பாற்பட்டுத் திகழ்வது ஒப்பற்ற சிவம் என்பது புலப்படுத்துவார், "கண்ணுங் கருத்துங் கடந்ததொருபேறு” என்றார். நண்ணி-நண்ண; நண்ணுதலால், நண்ணுதலாவது. தன்னருளால் அடியார்க்கு அணுகித் தோன்றுதல். சிவாநுபவம் சிவஞானிகளிடத்திலேயன்றி மற்றையோர்பால் விளங்கித் தோன்றாதென்பது, “வடம் அடக்கி நிற்கும் வடவித்தே போல” என்பதனாற் புலனாம். வடம்- ஆலமரம். வடவித்து. ஆலின் விதை.

இங்ஙனம் புறத்தும் அகத்தும் அளவிடப்படாத பெரும்பொருளை ஓருடம்பிலே கட்டுப்பட்டிருக்கும் ஆன்மா தன்னுள் அடக்குமாறு எங்ஙனம்? என வினவிய மணாக்கனை நோக்கி அருளிச் செய்வதாக அமைந்தது.