பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

83


49. வானகமும் மண்ணகமு மாய்நிறைந்த வான்பொருளை
ஊனகத்தே யுன்னுமதென் என்றனையேல்-ஏனகத்து
வாதனையை மாற்றும் வகையதுவே மண்முதலாம்
ஆதனமே யன்றோ வதற்கு.

எனவரும் திருக்களிற்றுப்படியாராகும்.

(இ-ள்) வான்முதல் மண்ணீறாகவுள்ள எல்லாப் பொருள்களும் தானேயாய் எங்கும் நீக்கமற நிறைந்த பெரும் பொருளாகிய சிவத்தை ஓருடம்புக்குள்ளே அடங்க நினைத்தல் எவ்வாறு? என வினவுவாயாயின், என்போல்வாரிடத்தும் அநாதியே கூடிப் போந்த மலவாதனயை அறவே மாற்றுந் திறனாயமைந்தது அம்மெய்ப் பொருளை உடம்பினகத்து நினைந்து போற்றும் அம்முறையே யாகும்; நிலமுதலாய தத்துவங்களும் உயிர்த்தொகுதியும் ஆகிய எல்லாம் சிவபரம்பொருளாய அதற்கு இருப்பிடமல்லவா? எ-று.

அது என்றது, உன்னுதலை. உன்னும் முறைமையாவது,

வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாருந் தாமென்க-ஞானத்தான்
முன்னஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்னெஞ்சத் தானென்பன் யான்.

எனக் காரைக்காலம்மையார் அருளியவாற்றான் இதுவென அறிக.

இந்த மெய்ப்பொருளை அகத்தே கண்டு மலவாதனை தீர்ந்திருப்பார் போல் புறத்தேயுங்கண்டு மலவாதனையைப் போக்குதல் கூடுமோ? என வினவிய மாணவனை நோக்கி அருளிச் செய்வதாக அமைந்தது பின்வருந் திருப்பாடலாகும்.

50. கல்லிற் கமரிற் கதிர்வாளிற் சாணைதனில்
வல்லுப் பலகையினில் வாதனையைச்-சொல்லும்
அகமார்க்கத் தாலவர்கள் மாற்றினர்காண் ஐயா
சகமார்க்கத் தாலன்றே தான்.

(இ-ள்) ஆடையினைத் துவைத்தற்குரிய கல்லின் கண்ணும், வயல்வெடிப்பினுள்ளும், ஒளியுடைய வாட்படையினும், சந்தனக் கல்லின் கண்ணும், சூதாடுகருவிப் பலகையின் கண்னும், முறையே திருக்குறிப்புத் தொண்டர், அரிவாட்டாயர், ஏயர்தோன் கலிக்காமர், மூர்த்தியார், மூர்க்க நாயனர் ஆகிய பெருமக்கள் ஒவ்வொரு தொழிலைச் செய்யும்போதே சிறப்பித்துரைக்கப்படும். சிவனளவில்