பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4சடங்கினைக் கொண்டு ஐந்தெழுத்தின் உட்பொருளை விளக்கினார் மணிவாசகர். இத்தகைய பாடல்கள் ஒர் இனத்தின் பண்பாட்டுத் தனித் தன்மையை விளக்கும் தொன்மையுருக்கள்(archetypes of a race) என்று உளவியல் பேரறிஞர் சி. ஜி. யூங் கூறுகின்றார். நார்மன் கட்லெர் போன்ற மேலை நாட்டுப் பேராசிரியர்கள் திருவெம்பாவையைத் தங்கள் மொழியில் ஆக்கிக் கொண்டு தங்களுக்கும் சைவத்தின் பெருமை தெரியும் என்று பூரித்துப் போகின்றார்கள்.

சைவ சித்தாந்திகளிடமும், தருக்க வல்லுநர்களிடமும், இலக்கியப் பேராசிரியர்களிடமும், மேடைப் பேச்சு வித்தகர்களிடமும் உள்ள இந்தத் திருவெம்பாவையைப் பேருந்தும் புகைவண்டியும்கூடப் பார்த்திராத தொலை தூர ஏழை எளிய மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சென்னை வானொலி நிலையம் எண்ணி, சென்ற ஆண்டு என்னை விளக்கம் கூற வேண்டிக் கொண்டது. சமயத் தொண்டாகவும் சமுதாயத் தொண்டாகவும் இதனை ஏற்று முப்பது நாட்களும் திருவெம்பாவையையும் திருப்பள்ளியெழுச்சியையும் காலை நேரத்தில் வானொலியில் உரை விளக்கம் தந்து வந்தேன்.

கணக்கற்ற தொலைபேசி, கடிதம் மற்றும் நேரிடை வாழ்த்துகள் வந்து குவிந்தன. கடமையைச் சரிவரச் செய்தோம் என்ற மகிழ்ச்சி. வானொலிக்கும் வாழ்த்துரைத்த அனைவர்க்கும் என் தமிழ் நெஞ்சம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது. சந்தன மரத்தை வெட்டுகின்ற கோடரிக்குக்கூட மணம் கிடைத்து. விடுகின்றதன்றோ !

| திருச்சிற்றம்பலம் |
சி. பா.