பக்கம்:திரு. வி. க.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 101

“சிலர் தேசப்பணியை நாத்திகப் பணி என்றும், தெய்வப் பணியை ஆத்திகப் பணி என்றும் நினைந்து இதுபோழ்தும் வாழ்ந்து வருகின்றனர். இவர்தம் அறியாமைக்கு இரங்காது வேறென் செய்வது? இவர் தேசப்பணி எண்பது மண்பணி என்று நினைக்கின்றனர் போலும்!

மண்ணிலுள்ள மனிதர்க்கே நாம் செய்யும் பணி பயன்படுகிறது. மனிதர்க்குச் செய்யும் பணி அவர் தம் உள்ளத்துள்ள ஆண்டவனையே சாரும். ஆதலின், தேசப்பணி என்பது தெய்வப் பணியே என்க. உயிர்களை வழிபடுவதும், ஆண்டவனை வழிபடுவதும் ஒன்றே. இதைக் குறித்து யான் பல முறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். ஆதலால், அதைப்பற்றி ஈண்டு விரித்தெழுதாது செல்கிறேன். தேசத்தில் உலவும் (நடமாடும்) கோயில்களுக்குப் பணி செய்யாது, ஒரே இடத்திலுள்ள விக்கிரகங்களுக்குப் பணி செய்வது, அறியாமையேயாகும். அண்டை வீட்டு ஏழை பசியால் வருந்துவதைக் கண்டும் கேட்டும் அவனை நோக்காது, பாலும் பழமும் தேனுங் கொண்டுபோய் விக்கிரகத்தின் தலையில் பொழிந்து இன்புறுவோன் பூசையைக் கடவுள் ஏற்றுக் கொள்வரோ? ஒருபோதும் ஏற்றுக் கொள்ளார். இயற்கைக் கோயிலை வழிபடாது. செயற்கைக் கோயிலை மட்டும் வழிபடுவோர், கடவுள் அன்பு வடிவாக உயிர்களில் எழுந்தருளியுள்ள உண்மையறியாத பேதை மாக்களேயாவர். தேசத்தி லுள்ள மக்கள் பட்டினி கிடந்து வருந்துங்காலை, செல்வர் பயனற்ற காரியங்களுக்குப் பணத்தைக் கொடுப்பதும், கற்றவர் பயனற்ற பொருள்களில் தமது அறிவைச் செலுத்துவதும் வெறுக்கத் தக்கனவே. தேசத்தில் மக்கள்-உயிர்கள்-தெய்வக் கூறுகள்-வருந்தி உழலும் காலத்து, பல்லாயிரக் கணக்கான பணத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/111&oldid=695397" இலிருந்து மீள்விக்கப்பட்டது