பக்கம்:திரு. வி. க.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ல் அச. ஞானசம்பந்தன்

ஒரளவு பொருளாதார நட்டம் அடைந்தார் திரு. வி.க. ஆனால், அவர் ஒருவருடைய நட்டம் தமிழ் நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும், தமிழர்க்கும் எத்தகைய பெருவாய்ப்பாய் அமைந்து விட்டது! விதை, தான் அழுகித் தானே பயனுடைய மரத்தைத் தோற்றுவிக்க வேண்டியுள்ளது. அதுபோலக் கலியாண சுந்தரனார் என்ற தனி மனிதர் அடைந்த பொருளாதார நட்டம் தமிழ்மொழி சிறக்கவும், தமிழர் வாழ்வில் சமரசம் மலரவும், ஆங்கிலமறியாத தமிழர் காந்திய வாதத்தையும் மார்க்ஸியத்தையும் உணரவும் வாய்ப்பளித்தது. தமிழ்நாட்டின் தவம் திரு. வி.க.வின் கல்விக்குத் தடை விதித்தது.

தீமையில் விளைந்த நன்மை

இதில் வியப்புக்குரியது யாதெனில் இத்துணைச் சமயச் சண்டைகள் மலிந்துள்ள காலத்தில்தான் திரு. வி.கவின் சமரசம் மலர்ந்தது. அதைவிடச் சிறந்த ஒன்றும் நிகழ்ந்தது. கதிரைவேற்பிள்ளையை வழக்குக்கு இழுத்தவர்கள் இராம லிங்க வள்ளலாரின் கட்சி என்று தம்மைக் கூறிக் கொள்பவர்கள். எனவே, கதிரைவேற்பிள்ளைக்கு மிகவும் உற்றவரான திரு. வி.க.விற்கு இராமலிங்க வள்ளலாரிடத்தும் அவரைச் சேர்ந்தவர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்பவர் களிடத்தும் பகைமை மூளுதல் மிகவும் நியாயமானதே. தம் படிப்பையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் கெடுத்தவர்கள் வள்ளலார் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று திரு. வி.க. நினைத்து வருந்திப் பகைமை கொள்ளக் காரணம் நிரம்ப உண்டு. ஒருவேளை இதனாலேயே எதிர்க் கட்சிக்காரர்களின் மூலவராகிய வள்ளலார் எத்தகையவர் என்று அறிந்து கொள்ளும் நோக்கத்தில் திரு. வி.க. அருட்பாப் பாடல்களைக் கற்கத் தொடங்கியிருக்கலாம். என்ன நினைத்து அருட்பாவை எடுத்தாரோ நாம் அறியோம். ஆனால், அதனால் விளைந்த பயன் மட்டும் நன்கு தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/16&oldid=695450" இலிருந்து மீள்விக்கப்பட்டது