பக்கம்:திரு. வி. க.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 இ அ.ச. ஞானசம்பந்தன்

நம் நாட்டு நிலை

நம்முடைய நாட்டின் இன்றைய எழுத்தாளர்களை எடுத்துக்கொண்டால் முன்னர்க் கூறிய விகிதாசாரம் மாறி இருக்கும். பண்டைய இலக்கியங்களைப் பயிலாதவர்கள் எழுதவே முடியாது என்று யான் கூற வரவில்லை. ஆனால், பழைய இலக்கியங்களில் தோயாது எழுதுபவர்களின் எழுத்தில் ஆழம் இருத்தல் கடினம். நடைமுறையில் ஏற்படும் அனுபவம் ஒன்றைமட்டுமே கொண்டு எழுதும்பொழுது, அந்த எழுத்து, அந்த நேரத்தில் படிப்பவர் மனத்தைக் கவரலாம். காரணம், அந்த எழுத்தின் அடிப்படையிலுள்ள அனுபவத்தின் ஒரு பகுதி படிப்பவரிடமும் உண்டன்றோ? அதனாலேயே அவ்வெழுத்துக் கவர்கிறது. ஆனால் இன்று கிடைக்கின்ற இந்த அனுபவம், பழமை எய்தி அழிந்துவிட்ட பிற்காலத்தில் இந்த அனுபவத்தின் அடிப்படையில் பிறந்த எழுத்தும் வலி இழந்துவிடும். சுருங்கக் கூறினால் காலத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இந்த எழுத்துக்கு இருக்க முடியாது. சாகா இலக்கியம்

சிலப்பதிகாரம், இராமாயணம் போன்ற நூல்கள் தோன்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகிவிட்டன. அவற்றில் காணப்பெறும் ஊர்களும், இடங்களும் இன்று இல்லை. அவை இருப்பினும் நூல்களிற் கூறப்பெற்ற நிலைக்கு முற்றிலும் மாறுபட்டே காணப்பெறுகின்றன. என்றாலும் மனித சமுதாயம் இன்னும் அவற்றில் இன்பங்காண முடிகிறது. பழமையாகிய இலக்கிய அனுபவத்தில் தோய்ந்து தம் புதிய அனுபவத்தை அதனுடன் குழைத்து ஆக்கப்பெறும் இலக்கியங்கள் காலத்தை வெல்லும் ஆற்றல் படைத்தவை. அவர் கற்ற முறை

திரு.வி.க. என்ற எழுத்தாளர் பழைய இலக்கியங்களில் தோய்ந்த எழுத்தாளர். அவருடைய கல்வி முறையே அலாதியானது. ‘கற்றலில் கேட்டலே நன்று என்ற முதுமொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/170&oldid=695462" இலிருந்து மீள்விக்கப்பட்டது