பக்கம்:திரு. வி. க.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. 9

சிறப்புகளை மட்டும் கைக்கொண்டு ஒரு புதிய தமிழ்நடை யைத் தோற்றுவித்தார். அந்த நடையில் வடசொற்கள் மிகுதியும் காணப்பெறா என்றாலும் யாவரும் படித்துப் பயனடையக்கூடிய சிறப்பும் அதிலிருந்தது. தமிழ்நடையைப் பொறுத்த மட்டில் இரண்டு மாறுபட்ட பழமைகளிலிருந்து, ஒற்றுமைப்பட்ட ஒரு புதுமையை தமக்கென ஒரு தனி வழியைக் கண்ட அறிஞர் திரு. வி.க.

தமிழறிஞர் நுழையாவிடம்

அவர் காலத்துக்கு முன்னர்த் தமிழறிஞர் அரசியலில் புகுவது என்பது கனவுகூடக் காணமுடியாத ஒன்றாகும். ஆங்கிலம் அறிந்தவர்களே அரசியல் அறியமுடியும் என்று அனைவரும் நம்பினர். அரசியல் பற்றி எழுதினாலும் பேசினாலும் அதனை ஆங்கிலத்திலேயே செய்தனர். ஓரோவழித் தமிழில் எழுத அல்லது பேச நேர்ந்தாலும் கால் பங்குத் தமிழும் முக்காற் பங்கு ஆங்கிலமும் விரவியே எழுதியும் பேசியும் வந்தனர். இந்தக் காலத்தில் தோன்றிய திரு. விக. ஓர் உண்மையை நன்கு அறிந்து கொண்டார். மொழி என்பது மனிதனின் எண்ணத்தை வெளியிடும் கருவி மட்டுமன்று; அது அவனுடைய உணர்ச்சிகளுடன் பின்னிப் பிணைந்து கிடப்பதாகும். ஒரு மனிதனுடைய உணர்ச்சியைத் தூண்ட வேண்டுமானால் அதை அவனுடைய தாய் மொழி மூலம் செய்யமுடியுமே தவிரப் பிற மொழி மூலம் செய்ய இயலாது. இந்த நுணுக்கமான மனவியலை அறிந்து கொண்ட எழுத்தாளர் திரு. வி.க. தமக்கெனவே தூய எளிய தமிழில் ஒரு நடையை வகுத்துக் கொண்டார். எத்துணை நுட்பமான கருத்தையும் கேட்போர் உளத்திற் சென்று தைக்கும் முறையில் எழுதவும் பேசவும் அவரால் முடிந்தது. இதுவும் அவர் செய்த புரட்சிகளுள் ஒன்று. இரண்டு முரண்பட்ட கூட்டத்தாரையும் இணைக்கும் பாலமாக விளங்கினார் திரு. வி.க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/19&oldid=695483" இலிருந்து மீள்விக்கப்பட்டது