பக்கம்:திரு. வி. க.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 இ. அ.ச. ஞானசம்பந்தன்

பாரத மக்களே! நாம் தொகையில் முப்பது கோடி பேர்; நம் பெருந் தலைவரைப் போலீஸார் தடி அடிக்கு இரையாக்கிவிட்டோம். இனி என் செய்வது? நமது கடமையென்ன? லஜபதியின் நோக்கத்தை நிறைவேற்ற முயலல் வேண்டும். லஜபதியின் பருவுடல் மறைந்தாலும், அவரது சிங்கநோக்கும், தியாகமும், வீரமும் அருவமாக நாடு முழுவதும் பரந்து வீறிடுகின்றன; உங்களைத் தட்டி எழுப்புகின்றன. எழுங்கள்; எழுங்கள். அவற்றின் அறிகுறியாக ஆங்காங்கே லஜபதிக்கு உருவச்சிலை நாட்டுங்கள்; நிலையங்கள் எழுப்புங்கள்; மற்றும் பல அமைப்புகள் காணுங்கள். லஜபதி விடுத்துச் சென்ற உரிமைப்போர் தொடுக்க எழுங்கள்; எழுங்கள். உரிமை நாட்டில் லஜபதி போன்ற தலைவர் போலீஸாரால் அடிபட்டு இறப்பரோ? நாட்டின் நிலையை உன்னுங்கள்; உன்னி உன்னி உரிமை வேட்கை கொள்ளுங்கள்; கொண்டு எழுங்கள்; எழுங்கள். எழுந்து அஹிம்சா தர்மப்போர் முன்னணியில் நில்லுங்கள். லஜபதிக்கு அமைக்கத்தக்க நினைவுக்குறி இதுவே.

ஆண்டவனே! லஜபதியை அழைத்துக் கொண்டனை; லஜபதி போன்ற ஒரு தலைவரை நல்குக: லஜபதியின் வீரத்தை எங்களிடை நிலை பெறுத்துக. - -

பயன் கருதாப் பணியாற்றிப் போர்க்களத்தில் வீர முழக்கத்துடன் பரு உடலை நீத்த லஜபதியின் இன்னுயிர் ஆண்டவன் திருவடி நீழலில் ஆறுதலடைவ தாக.”.

  • தமிழ்ச் சோலை, பக்கம் 381, 382.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/204&oldid=695499" இலிருந்து மீள்விக்கப்பட்டது