பக்கம்:திரு. வி. க.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 11

இவர்களால் எவ்வித உலகியற் பயனும் ஏற்படவில்லை. இது சரியா தவறா என்பது இங்கு வினாவன்று. நடைமுறையில் உள்ளதை அப்படியே எடுத்துக் கூறுவதே என் நோக்கமாகும்.

குறிக்கோள் வேண்டும்

வாழ்க்கையில் ஒவ்வொருவர்க்கும் ஒரு குறிக்கோள் வேண்டும். இக் குறிக்கோள்கள் தம்மில் மாறுபடலாம். ஆனால், குறிக்கோள் இல்லாத வாழ்க்கை பயனற்ற விலங்கு வாழ்க்கையாகும். குறிக்கோள் இலாது கெட்டேன்’ என்று நாவுக்கரசர் பெருமான் பாடிச் செல்கிறார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளே பலர்க்கும் உண்டு. ஆனால், முன்னேற்றம் என்பது பற்றிக் கவலையுறாமல் தொண்டு செய்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் சிலர். இவர்களையே பெரியோர்கள் என்று அறிவுலகம் போற்றுகின்றது. தொண்டாகிய குறிக்கோளை மேற்கொண்டு வாழ்பவர் வாழ்க்கையில், ஒன்றும் எஞ்சுவதில்லை. பல சமயங்களில் அவருடன் வாழ்பவர்கள், இத் தொண்டர் களைப் பைத்தியக்காரர்கள்’, ‘பிழைக்கத் தெரியாதவர்கள் என்றெல்லாம் ஏசுவதுமுண்டு. உலகத்தாரால் எவ்வாறு ஏசப் பெற்றாலும் ஒன்று மட்டும் உறுதி. தம்மையே அழித்துக் கொண்டு தொண்டு செய்யும் இப் பெரியார்கள் இல்லை யானால் உலகம் வாழ முடியாது. இது கருதியேதான் புற நானூற்றுக்காரர் உண்டாலம்ம இவ்வுலகம் என்ற பாடலில் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கு என முயலுநர் உண்மையானே, உண்டால் அம்ம இவ்வுலகம்” என்று பேசுகிறார். வள்ளுவப் பெருந்தகையும் பண்புடையார்ப் பட்டு உண்டு உலகம் அஃது இன்றேல் மண்புக்கு மாய்வது மன்’ என்று கூறிப் போனார்.

1. புறம், 182 2. குறள். 996

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/21&oldid=695505" இலிருந்து மீள்விக்கப்பட்டது